Published : 27 Apr 2022 06:09 AM
Last Updated : 27 Apr 2022 06:09 AM

ரூ.97.55 கோடியில் 11 அரசு ஐடிஐ-க்கள் தொடங்கப்படும்: தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடந்தது. முன்னதாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் சி.வி.கணேசன் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் துறை செயலர் அதுல் ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.

சென்னை: இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்காக ரூ.97.55 கோடியில் 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது உறுப்பினர்களின் விவாதங்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பதில் அளித்த பின்னர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்றுத் தரவும், தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கிடவும், கடலூர் மாவட்டம், மங்களூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, தருமபுரி மாவட்டம் அரூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டம் குன்னம், கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய 11 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) ரூ.97.55 கோடியில் தொடங்கப்படும்.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார்வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ வாகனம் வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.

இந்த வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகைரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். இத்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி நலத்திட்ட உதவித் தொகையாக ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்புக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்து மரண உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதில் உள்ள பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி நலத்திட்ட உதவித்தொகையாக ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்புக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் வழங்கப்படும் திருமண நலத்திட்ட உதவித்தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x