

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யுவ ராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். திருச்செங்கோட் டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி அந்த பெண்ணுடன் கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள கோயிலுக்குச் சென்ற போது ஒரு கும்பல் அவரை கடத்தி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த போலீஸார், தீரன் சின்னமலை பேரவை இயக்கத் தலைவர் யுவ ராஜ் உட்பட பலரை கைது செய்த னர். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சிறையில் இருக்கும் யுவராஜ் தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பின் கடும் ஆட்சேபத்தால் யுவராஜூக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் விடுமுறை கால நீதிபதி பி.கோகுல்தாஸ் முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, நிபந்தனை அடிப்படையில் யுவராஜூக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, ரூ.10 ஆயிரம் பிணைத் தொகையுடன் இரு நபர் உத்தரவாதத்தை நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் முன்பாக சமர்ப்பித்து ஜாமீனில் செல்ல உத்தரவிட்ட நீதிபதி, யுவராஜ் திருநெல்வேலியில் தங்கியிருந்து தினமும் காலை, மாலை இருவேளையும் டவுன் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார்.