

சென்னை: டெல்டா மாவட்டங்களில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க எவ்வளவு செலவானாலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி, ‘‘கீழ்வேளூர் தொகுதி வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் கஜா புயலுக்கு பிறகு கடல்நீர் உட்புகுந்து குடிநீர், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கடல்நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணை கட்டப்படுமா’’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: பொதுவாக டெல்டா பகுதியில்காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட36 ஆறுகள் கடலில் கலக்கின்றன. காலப்போக்கில் 36 ஆறுகளிலும் கடல்நீர் உள்ளே புக ஆரம்பித்துவிட்டது. சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு உள்ளே புகுந்த காரணத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன, குடிநீர் இல்லை; ஆடு மாடுகள்கூடகுடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில்கடலோர பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டனர். எனவே, கடல்நீர் உட்புகுவதை தடுக்க அரசு சில திட்டங்களை தயாரித்தது.
முதலில் வளவனாறு, அடப்பாறு, அரிச்சந்திராநதி, வெள்ளையாறு ஆகியவற்றில் ஆசிய வங்கி உதவியுடன் 5 இடங்களில் தடுப்பணை கட்டப்படுகிறது. நபார்டு மூலம் காவிரி ஆறு, கடுவைஆறு, உப்பாறு ஆகியவற்றில் தடுப்பணை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில நிதியின் மூலம் கோரையாறு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 இடங்களில் கடைமடை பகுதிகளில் தடுப்பணை கட்டப்பட்டு கடல்நீர் உட்புகுவது தடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நபார்டு நிதியின் மூலம் வெள்ளப்பள்ளம் உப்பாறு, மஞ்சளாறு பகுதிகளில் 2 தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. கீழ்வேளூர் பகுதியிலும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எவ்வளவு செலவானாலும், தடுப்பணை கட்டி, மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.