

சென்னை: தமிழகத்தில் மின்தடைக்கு காரணம் நிர்வாகக் கோளாறு என்று அதிமுக உறுப்பினர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில், மின்சாரம் மற்றும் தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கிவைத்து, அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி பேசியதாவது: தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு மத்திய அரசு நிலக்கரி தரவில்லை என்றும், மத்திய மின் தொகுப்பில் இருந்து 296 மெகாவாட் மின்சாரம் வரவில்லை என்றும் கூறுகிறீர்கள். எங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் வழங்கியநிலக்கரியைவிட, உங்களுக்கு மத்திய அரசு அதிகம் வழங்கியுள்ளது. எங்களுக்கு 1.10 கோடி டன்வழங்கப்பட்டது. இப்போது 1.72 கோடி டன் வழங்கப்படுகிறது. இருப்பினும் மின்தடை ஏற்பட நிர்வாகக் கோளாறே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்து மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: தமிழகத்துக்கு தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால்,மத்திய அரசு 48 ஆயிரம் முதல்50 ஆயிரம் டன்தான் வழங்குகிறது. கடந்த வாரம் 24 ஆயிரம் டன்வழங்கியது. 2 நாளுக்குத்தான் நிலக்கரி இருப்பு உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் மின்தடை ஏற்படுவது போன்ற மாயத்தோற்றம் உருவாக்க முயற்சிக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது சீரான மின்விநியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.