வா.புகழேந்தி
வா.புகழேந்தி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு: ஜூன் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்

Published on

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. தமிழக அரசிடம் விசாரணை அறிக்கை வரும் ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிச.5-ம் தேதிகாலமானார். அவரது மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றமுன்னாள் நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்.25-ம்தேதி ஆணையம் அமைக்கப்பட்டது.

159 பேரிடம் விசாரணை

2017 நவ.22-ம் தேதி ஆணையத்தின் விசாரணை தொடங்கியது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகனராவ், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள் உட்பட மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற இருந்த நிலையில், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடமும் விசாரணை நடத்தக்கோரி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு வா.புகழேந்தி மனு அளித்தார்.

இந்த நிலையில், ஆணையத்தில் நேற்று ஆஜரான புகழேந்தி, ‘‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்.

முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகனராவ் ஆகியோரது கருத்துகள் முரணாக உள்ளன. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்காதது ஏன்? ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியின் அலட்சியமும் இதில் இருக்கிறது’’ என்றார்.

குறுக்கு விசாரணை

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அப்போலோ தரப்பு வழக்கறிஞர் மைமூனா பாட்ஷா ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, சுமார் நான்கரை ஆண்டுகளாக நடந்து வந்தவிசாரணை நேற்றுடன் நிறைவுபெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இறுதி விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணியை ஆணையம் இன்று தொடங்குகிறது. அறிக்கையை ஜூன் 24-ம் தேதிக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளது.

வாக்குமூலம் அடிப்படையில்..

இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் ஆணைய விசாரணையின்போது காணொலி மூலமாக பங்கேற்றனர். சிகிச்சை விவரம், மருத்துவர்களின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அறிக்கையை இக்குழு ஒரு மாதத்துக்குள் ஆணையத்திடம் தாக்கல் செய்ய உள்ளது. ஆணையம் அந்த அறிக்கையையும் பரிசீலித்து, தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in