

சென்னை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் நீதிபதி உட்பட, தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 53 அமர்வு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்கும், நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதி சி.சஞ்சய் பாபா, தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தொழிலகத் தீர்ப்பாய நீதிபதி பி.முருகன், நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட அமர்வு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜி.டி.அம்பிகா புதுச்சேரிக்கும், சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.குமரகுரு நெல்லை மாவட்டத்துக்கும், கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.சக்திவேல் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல, விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.கந்தகுமார் வில்லிப்புத்தூர் நிரந்த லோக் அதாலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி எம்.ஜோதிராமன், சென்னை முதலாவது தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாகவும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி கே.ராஜசேகர், கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.நசீர்அகமது, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி ஆர்.கலைமதி, சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம், கரூர் மாவட்ட நீதிபதியாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, தமிழகம் முழுவதும் மொத்தம் 53 அமர்வு நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்.