

மீத்தேன் காஸ், ஷெல் எரிவாயு, மேகதாது அணை ஆகிய மூன்று திட்டங்களையும் நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் விநாயகா ஜி.ரமேஷை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது வைகோ பேசிய தாவது:
மீத்தேன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த திட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் ஒப்பந்த நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் தற்போது ரத்தாகியுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டத்தை நிறைவேற்றாததால் ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம்.
அதேபோல் ஷெல் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் வந்தால், அதை தடுப்போம். ராணுவமே வந்தாலும் விவசாயிகளை திரட்டிப் போராடுவோம்.
அதேபோல் காவிரி ஆற்றில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக நம்மை பிரதமர் நரேந்திர மோடி நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். இதுபோன்ற மோசமான பிரதமரை நான் பார்த்ததில்லை. தமிழக விவசாயிகளின் உரிமையை பறிக்க விடமாட்டோம்.
இந்த மூன்று திட்டங்களையும் எந்த வகையிலும் நிறைவேற விடமாட்டோம். மதிமுக மற்றும் எதிர்ப்பு இயக்கங்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டங்களை நடத்துவோம்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை அவர்கள் நிறைவேற்றுவது சந்தேகமே.
நாங்கள் வெற்றிபெற்றால் கயத்தாறு 2-வது பைப்லைன் திட்டத்தை நிறைவேற்றுவோம். அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்வோம். கயத்தாறு ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு வைகோ கூறினார்.