

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: நீட் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதில் மத்திய பாஜக அரசின் ஆதரவோடு தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இதை தமிழக பாஜகவும் ஆதரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாட்டை ஆளுநர் நடத்தியிருக்கிறார்.
தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இத்தகைய போக்கு நீடித்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு சுதந்திரமாக செயல்பட முடியாது. தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் நிறைவேற்றியிருக்கிறார். முதல்வரின் நடவடிக்கையை வரவேற்கிறோம்.
நீட் உள்ளிட்ட 13 மசோதாக்களை கிடப்பில் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநரை கண்டித்து வரும் 28-ம் தேதி (நாளை) மாலை 3 மணி அளவில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன ஆர்ப்பாட்ட பேரணி புறப்படும். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்பதோடு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் ஆளுநருக்கு உணர்த்த வேண்டும்.