

சென்னை: புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்க, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குளத்தை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் சீரமைப்புப் பணியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குளம் சீரமைப்புப் பணி குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை சார்பில் கங்காதீஸ்வரர் கோயில் குளத்தில் தூர்வாருதல், குளத்தைச் சுற்றிலும் கரைகளை பலப்படுத்துதல், கருங்கல் படிக்கட்டுகள் அமைத்தல், கரைகளை சுற்றி நடைபாதை அமைத்து மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் மழைநீர் வடிகால் அமைத்து அவற்றிலிருந்து வரும் மழைநீரை கோயில் குளத்தில் சேமிக்க மழைநீர் இணைப்புகள் அமைக்கவும், அவற்றில் வடிகட்டிகள் அமைத்து சுத்தமான நீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.