Published : 27 Apr 2022 06:39 AM
Last Updated : 27 Apr 2022 06:39 AM
சென்னை: ரேஷன் கடைகளில் விரல் ரேகைபதிவு செய்ய முடியாத இனங்களில் கண் கருவிழி மூலம் சரிபார்த்து பொருட்கள் வழங்கும் நடைமுறை ஓர் ஊரகப் பகுதியிலும், ஒரு நகரப்பகுதியிலும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். பின்னர் அதுகுறித்து கருத்து கேட்டுமாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று பேரவையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவரின் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்குவதில் பொதுமக்களுக்கு பெரிதும் சிரமம் இருப்பதாக திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
அதற்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அளித்த பதில் வருமாறு: 2020-ம் ஆண்டு அக்.1-ம் தேதி முதல் இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் விரல் ரேகை சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
அதன்படி, குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர் எவரும் அவரது விரல் ரேகைசரிபார்ப்புக்குப் பிறகு பொருட்களைப் பெறலாம். இதனால் தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும்முகவரி மாற்றம் மேற்கொள்ளாமலேயே பொருட்களைப் பெற முடியும்.
கடைகளுக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், உடல் நலம் குன்றி உயிர்காக்கும் மருத்துவ சிசிச்சை பெறுபவர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பயனாளிகள், அவர்கள் அங்கீகரிக்கும் பிரதிநிதிகளுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ரேஷன்கடைகளில் உள்ள படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும். அதற்கு வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் ஆகியோர் உரிய அனுமதியை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2.39 லட்சம் பேருக்கு இதுபோன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் 22-ம் தேதிவரை ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட 1 கோடியே 79 லட்சத்து 47,619 பரிவர்த்தனைகளில் 1 கோடியே 76 லட்சத்து 30,498 பரிவர்த்தனைகள் விரல்ரேகை பதிவின்படியே மேற்கொள்ளப்பட்டன. இது 98.23 சதவீதம் ஆகும்.
இருப்பினும் வயோதிகம் உள்ளிட்ட இதர காரணங்களால் விரல் ரேகை பதிவு செய்ய முடியாத இனங்களில் கண் கருவிழி மூலம் சரிபார்த்து பொருட்கள் வழங்கும் நடைமுறை மகாராஷ்டிரா, அசாம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை சோதனை அடிப்படையில் ஓர் ஊரகப் பகுதியிலும், ஒரு நகரப் பகுதியிலும் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக அறிந்தும், பயனாளிகளின் கருத்துகளைக் கேட்டும் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT