Published : 27 Apr 2022 06:46 AM
Last Updated : 27 Apr 2022 06:46 AM
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், தனது தொகுதியில் அதிக அளவில்நெல் விளையும் நிலையில், வைக்கோலைப் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதே கருத்தை கீழ்வேளூர் எம்எல்ஏ வி.பி.நாகை மாலியும் வலியுறுத்தினார்.
அதேபோல, “கடலூர், நாகை, விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முந்திரி அதிகஅளவில் விளைகிறது. முந்திரியை எடுத்த பின்னர் அந்தப் பழம் வீணாகிகிறது. எனவே, முந்திரிப் பழத்தில் இருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்” என்று பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.
மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், வாழை தொடர்பான தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவற்றுக்குப் பதில் அளித்து தொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது: வைக்கோலில் இருந்து காகிதம் தயாரிப்பது என்பது வர்த்தக ரீிதியில் பயனில்லை. பருவகாலப் பயிர் என்பதால், அதை சேமித்து வைப்பதற்கான கிடங்கும் இல்லை.
மேலும், காகித தயாரிப்புத் தொழில் என்பது ‘ரெட் பிளஸ்’ என்ற வகையில் வருவதால், டெல்டாமாவட்டங்களில் அதை அமைக்கமுடியாது. அதேநேரம், உணவுப்பொருள் தொடர்பான பூங்காவைடெல்டா மாவட்டங்களில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
மேலும், முந்திரியில் இருந்து உற்சாகபானம் இல்லையெனினும், ஊட்டச்சத்து பானமாவது தயாரிக்கவேண்டும் என்று உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். இதை வணிக ரீதியாகவும், தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராய வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் ஆய்வு செய்தபோது வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அதிக அளவில் வாழைவிளையும் தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில் வாழை மட்டை, நார் தொடர்பான தொழில் தொடங்குவது குறித்த திட்டம் அரசிடம் உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT