Published : 26 Apr 2022 06:30 PM
Last Updated : 26 Apr 2022 06:30 PM

மதுரை - நத்தம் பறக்கும் பாலம் விபத்து: ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்

மதுரை: மதுரை - நத்தம் பறக்கும் பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பான விசாரணை நிறைவுடைந்த நிலையில், பாலம் கட்ட ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.3 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை புதுநத்தம் சாலையில் 7.3 கி.மீ., ரூ.545 கோடியில் பறக்கும் பாலம் கட்டுமானப்பணி கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், நாராயணபுரம் பகுதியில் இணைப்பு பாலத்திற்கான காங்கிரீட் கர்டர் கீழே விழுந்து உத்திரபிரதேச தொழிலாளி ஆகாஷ் சிங் என்பவர் உயிரிழந்ததார்.

அதிர்ஷ்டவசமாக இணைப்பு பாலத்தின் காங்கிரீட் கர்டர் விழுந்த பாலத்தின் கீழ் பகுதியில் வாகனப்போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் அனுமதிக்கப்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, தேசிய தொழில்நுட்ப குழு ஆய்வுக்கு உத்தரவிட்டனர். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் 3 வல்லுனர்கள் கொண்ட குழுவினர் 2021 செப்டம்பர் 4ம் தேதி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுவரை நடந்த விசாரணையில் இணைப்பு பாலத்திற்கான இரண்டு தூண்களை இணைக்கும் பணி நடந்தபோது ஹைட்ராலிக் கிரேன் இயந்திரம் பழுதானதாலே 160 டன் எடை கொண்ட காங்கீரிட் கர்டர் கீழே விழுந்ததும், எடை குறைவான ஹைட்ராலிக் கிரேன் பயன்படுத்தப்பட்டிருப்பதும், இப்பணி பொறியாளர்கள் மேற்பார்வையில் இப்பணி நடக்காததும் விபத்திற்கு காரணம் கூறப்பட்டது. அதன்பின் ஒரு விசாரணை ஒரு புறம் நடந்தநிலையில் மற்றொரு புறம் விபத்து ஏற்பட்ட இடத்தில் நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்படி தற்போது இணைப்பு சுவரை கட்டிவிட்டு பின்பு கர்டர் பொறுத்தி வெற்றிகரமாக மீண்டும் கர்டர்கள் பொருத்தப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பறக்கும் பாலம் விபத்திற்கு காரணமான கட்டுமானப்பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்தம் நிறுவனத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையகம் ரூ.3 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையக அதிகாரிகள் கூறியதாவது: "இது வழக்கமான ஒரு விசாரணை நடவடிக்கைதான். ஏற்கனவே விபத்து தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட 6 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் பணியில் இல்லாத 2 கண்காணிப்பு பொறியாளர்கள் மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்டுமானப்பணியை ஒப்பந்தம் எடுத்த JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு மற்ற பணிகளை டெண்டர் எடுத்து பணி மேற்கொள்ள 2 ஆண்டுகள் தடை விதித்து இருந்தோம். தற்போது ரூ. 3 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளனர். தற்போது இறுதி நடவடிக்கை நீதிமன்றம் கையில் உள்ளது " என்று கூறினர்.

இன்னும் 6 மாதத்தில் பாலம் திறக்கப்படும்

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை போல் தென்தமிழகத்தில் அமைக்கப்படும் இந்த பிரமாண்ட பறக்கும் பாலம் கட்டுமானப்பணி இடையில் கரோனா காலத்திலும் பணிகள் தடைப்படாமல் முழுவீச்சில் நடந்தது. இடையில் விபத்து ஏற்பட்டதால் பணிகளில் சற்று தோய்வு ஏற்பட்டது.

திட்டமிட்டப்படி பணிகள் நடந்திருந்தால் இந்த மாதமே பறக்கும் பாலம் பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டிருக்கும். தற்போது மேம்பால கட்டுமான பணிகள் 80 சதவிகிதம் நிறைவடைந்து உள்ளது. இன்னும் 6 மாதத்தில் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x