Published : 26 Apr 2022 03:56 AM
Last Updated : 26 Apr 2022 03:56 AM
ராமேசுவரம்: இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், பட்டினிச்சாவு ஏற்படும் அச்சத்தால் 4 கைக்குழந்தைகளுடன் 11 பேர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். உணவுகூட கிடைக்காமல் ஏராளமானோர் திண்டாடுகின்றனர். அரசுக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, உணவுப் பஞ்சத்தால் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த பலர் அகதிகளாக தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே பல குடும்பங்கள் ராமேசுவரத்துக்கு வந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் ஆனைக்கோட்டம் மற்றும் காக்கா தீவு பகுதிகளில் வசித்து வந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த யோகன் (43), மாலா (42), கதிரமலை (72), ஜெயராம் (22), பேபி ஷாலினி (20) கேசனா (1), ரோசன் (28), வைத்தீஸ்வரி (20), கிரிசன் (01), பழனியாண்டி (75), ஜானகி (63), சதீஷ்குமார் (24), விதுரா (24), சபரிசன் (3), அரணியா (9 மாத குழந்தை) ஆகிய 15 தமிழர்கள் நேற்று அதிகாலை தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோயில் கடற்கரையில் படகுகளில் வந்து இறங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த மரைன் போலீஸார், அவர்களை மண்டபம் மரைன் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு இல்லை. இந்த நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள தமிழகத்துக்கு வந்தோம்” என தெரிவித்தனர்.
விசாரணைக்குப் பிறகு 15 பேரும், மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபட்டனர். கடந்த மார்ச் 22-ல் இருந்து இதுவரை தமிழகம் வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT