Published : 26 Apr 2022 04:19 AM
Last Updated : 26 Apr 2022 04:19 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகைசெய்யும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே அதிமுக எதிர்த்தது. பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரே துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமித்ததால், பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்களை சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். மேலும், மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, சட்ட மசோதாக்களை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக அரசின் உயர் கல்வித்துறையின்கீழ், 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. உயர்கல்வி அளிப்பதில் இந்த பல்கலைக்கழகங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை ஆற்றி வருகின்றன. இவற்றின் வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயர்கல்வி அமைச்சரும் செயல்படும் நேரத்தில், கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய அரசுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்தாலோசித்து துணைவேந்தரை ஆளுநர் நியமிப்பது மரபாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில், ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேக உரிமை என்பதுபோல், மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசால் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது, ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. இது மக்களாட்சி தத்துவத்துக்கு விரோதமானதாக உள்ளது.
மத்திய - மாநில அரசு உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையில், ‘அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது’ என்று பரிந்துரைத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநர்களிடம் இருந்தால், அது சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகும். பல்கலைக்கழக கல்வியில் மாநில அரசு இயற்கையிலேயே ஆர்வமாக அக்கறையுடன் இருக்கும் சூழலில், ஆளுநரிடம் இதுபோன்ற அதிகாரத்தை கொடுப்பது மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே அதிகார மோதலுக்கு வித்திடும் என்று அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 19 மாநிலங்கள், பூஞ்சி ஆணைய அறிக்கையை ஏற்கலாம் என கருத்து தெரிவித்தன.
எனது தலைமையில் திமுக அரசு அமைந்ததும், பூஞ்சி ஆணைய பரிந்துரைகள் குறித்து மீண்டும் மாநில அரசின் கருத்தை கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது. அதற்கு, ‘துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது என்ற பரிந்துரையை ஏற்க வேண்டும்’ என்று தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. அதேபோல ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவர் மாநில அரசின் ஒப்புதலுடன் வேந்தரால் நியமிக்கப்படுகிறார்.
தமிழகத்திலும், மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் செய்து, பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை பாஜக உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில், 2017-ல் பூஞ்சி ஆணைய பரிந்துரையை ஏற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதிமுக உறுப்பினர்களும் இதை ஆதரிப்பதில் நெருடல் இருக்காது. இது மாநில அரசின் உரிமை தொடர்புடைய பிரச்சினை என்பதால், உறுப்பினர்கள் ஒருமனதாக மசோதாவை நிறைவேற்றித் தரவேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, கு.செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன்(விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சின்னப்பா (மதிமுக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் சட்ட மசோதாவை வரவேற்றதுடன், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் வரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசும்போது, மறைந்த முன்னாள் முதல்வரின் பெயரை குறிப்பிட்டு பேசியதால், அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அதிமுக, திமுக தரப்பில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக உறுப்பினர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், பேரவைத் தலைவரை முற்றுகையிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து, பேரவைத் தலைவரை முற்றுகையிட்டவர்களை வெளியேற்ற உத்தரவிடுமாறு அவை முன்னவர் துரைமுருகன் கேட்டுக் கொண்டார். அப்போது பேசிய முதல்வர், “மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளிநடப்பு செய்வதற்கு காரணம் தேடிக் கொண்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சிதுணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் மரியாதை தரவேண்டியது மரபு. அமைச்சரே மரியாதை குறைவாக பேசியதால் அதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்று தெரிவித்துவிட்டு அவையில் இருந்து வெளியேறினார். அவருடன் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து பேசிய உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, சட்ட மசோதாக்களை நிறைவேற்றித் தரும்படி கோரினார். அவை முன்னவர் துரைமுருகன், மசோதாக்களை பிரிவு வாரியாக இன்றே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதற்கான சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தார். அதன்பின், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்ட மசோதாக்கள் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மசோதா ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT