

உதகை: சூழ்நிலைக்கு ஏற்ப கல்விமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் நேற்றுதொடங்கியது. ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் வரவேற்றார். ‘வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு, 2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும்' ஆகிய தலைப்புகளில் நடைபெறும் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 2047-ல் உலகத் தலைவராக இந்தியா இருக்கும் பொற்காலம் அடுத்த கால் நூற்றாண்டில் வரஉள்ளது. எனவே, துணைவேந்தர்கள் ஆலோசித்து, கல்விமுறையில் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான யோசனைகள் மற்றும் புதுமையான செயல் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. தற்போது அங்கு அமைதி நிலை திரும்பியுள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு - காஷ்மீருக்கு சுதந்திரமாக வந்து செல்லத் தொடங்கிஉள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட கிழக்கு மாநிலங்களில் இருந்த மாவோயிஸ்ட்கள் பிரச்சினை வெகுவாக குறைந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு அரசிடம் கருணை கிடையாது. இது துல்லிய தாக்குதலின் மூலமாக உணர்த்தப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முந்தைய கல்விமுறை, அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. தற்போது நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். 2047-ல் சர்வதேச அளவில் இந்தியா முன்னிலை வகிக்க, கல்வி முறைகளில்மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றமடைந்துள்ளது. நம்மை அச்சுறுத்தி வந்த நாடுகள்கூட, நம்மைக் கண்டு அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு உதாரணம், உக்ரைன் - ரஷ்யா போரில் எந்த நாட்டின் அழுத்தத்துக்கும் இந்தியா அடிபணியாமல் சுதந்திரமாக முடிவெடுத்தது. இந்தியாவை முதன்மை நாடாக கொண்டுச் செல்ல, பல்கலைக்கழகங்கள் பன்முகத் திறன்கொண்ட மாணவர்களை உருவாக்குவது கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ்குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் முதன்மைச் செயல் அதிகாரி தர் வேம்பு சிறப்புரையாற்றினர். தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.