Published : 26 Apr 2022 07:12 AM
Last Updated : 26 Apr 2022 07:12 AM
திருச்சி: அடுத்த 3 ஆண்டுகளில் தமிழக விமான நிலையங்கள் ரூ.7,000 கோடியில் மேம்படுத்தப்படும் என இந்திய விமான நிலைய ஆணையக் குழும தென்மண்டல செயல் இயக்குநர் சஞ்சீவ் ஜிண்டால் கூறினார்.
திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை சஞ்சீவ் ஜிண்டால் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருச்சி, திருப்பதி, விஜயவாடா உள்ளிட்ட விமான நிலையங்களில் உயர்நவீன வசதிகளுடன் கூடிய வான் ட்டுப்பாட்டு அறை கட்டுமான பணி விரைவில் தொடங்கும்.
நாட்டிலேயே விமானநிலைய மேம்பாட்டு பணிகளுக்காக தமிழகத்துக்குதான் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள விமானநிலையங்கள் ரூ.7,000 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளன. இவற்றில் கோவை விமானநிலைய மேம்பாட்டு பணிகளுக்கான ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை, மதுரை விமானநிலையங்களின் விரிவாக்கத்துக்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் எங்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓடுதளம், புதிய முனையம், வான் கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான ஓடுதளத்தின் நீளம் 1,350 மீட்டரிலிருந்து 3,115 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் கோவை, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில் பெரியரக விமானங்களை கையாள முடியும்.
சேலம் விமான நிலையத்தில் ரூ.7.5 கோடியில் விமானங்கள் நிறுத்தக்கூடிய ஏப்ரான் கட்டமைப்பு வசதி விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை விமானநிலைய விரிவாக்கம் மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. எனவே அதற்கான முயற்சிகள் தொடங்கிஉள்ளன என்றார். பேட்டியின்போது திருச்சி விமானநிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ், பொது மேலாளர் (பொறியியல் - கட்டுமானம்) கிருஷ்ணா உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT