Published : 26 Apr 2022 07:17 AM
Last Updated : 26 Apr 2022 07:17 AM
வேலூர்: வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் சிலர் வகுப்பறையில் உள்ள மேஜைகளை அடித்து உடைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக வேலூர் கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் செந்தில்குமார், வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் சம்பத் ஆகியோர் பள்ளியில் நேற்று விசாரணை நடத்தினர். மேஜைகளை உடைத்த ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளியில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதிக்கவில்லை என்பதால் இப்படி செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனை சந்தித்தனர். ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
பள்ளி வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக 10 மாணவர்களை வரும் 4-ம் தேதி வரை இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும், வரும் மே 5-ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வரலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெற்றோருடன் வந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கூறும்போது, ‘‘பள்ளி மாணவர்களை இடைநீக்கம் செய்ய தலைமை ஆசிரியருக்குத்தான் அதிகாரம் உள்ளது. அவருக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதுதொடர்பாக ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பள்ளியில் மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேஜைகளை உடைத்த மாணவர்கள் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. பள்ளி மேலாண்மைக் குழுமூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT