Published : 26 Apr 2022 06:08 AM
Last Updated : 26 Apr 2022 06:08 AM

கோவை | பிரதமர் படம் அகற்றப்பட்ட விவகாரம் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் புகைப்படத்தை அகற்றிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். படம்: ஜெ.மனோகரன்

கோவை: வெள்ளலூர் பேரூராட்சியில் பிரதமரின் புகைப்படத்தை அகற்றிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் நேற்று முற்றுகையிட்டனர்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறையில், கடந்த 23-ம் தேதி அப்பகுதி பாஜக நிர்வாகிகள் பிரதமர் நரேந்திரமோடியின் புகைப்படத்தை பொருத்தினர். இதையறிந்த திமுக கவுன்சிலர்கள் அங்கு வந்து பிரதமரின் படத்தை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளிக்க வந்தனர். 5 பேரை மட்டும் போலீஸார் உள்ளே அனுமதித்தனர். மற்றவர்களை அனுமதிக்காததால், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

முன்னதாக, ஆட்சியரிடம் அளித்த மனுவில், ‘‘வெள்ளலூர் பேரூராட்சியில் பிரதமரின் புகைப்படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பிரதமரின் புகைப்படத்தை மீண்டும் வைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் படத்தை வைக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x