

ஈரோடு/நாமக்கல்: நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின், வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமை வகித்தார்.
நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தாளவாடி மோகன், நாராயணன், ஆசனூர் அருள்சாமி, கடம்பூர் ராமசாமி, மகேஷ், சத்தியமங்கலம் எஸ்.சி.நடராஜ், எம்.சுரேந்தர், பவானிசாகர் எஸ்.மகேந்திரன், பி.ஏ.வேலுமணி, சங்கத்தின் மாவட்டச்செயலாளர் சி.கே.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
கோரிக்கைகள் குறித்து திருப்பூர் எம்பி கே.சுப்பராயன், முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி ஆகியோர் பேசினர். இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் முன்னிலையில், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கூட்ட முடிவில் அளிக்கப்பட்ட மனுவில், நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை காலை 7 மணிக்கு பணிக்கு வரச்சொல்லும் நடைமுறையை மாற்றி 9 மணிக்கு வரச் சொல்லி, வேலை நேரத்தை குறைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒருநாள் கூலியாக ரூ.400 வழங்க வேண்டும். புதிய வேலை அட்டையை தாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தற்போதுள்ள கூலித் தொகை ரூ.200-லிருந்து ரூ.400ஆக உயர்த்த வேண்டும். பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.