Published : 26 Apr 2022 05:46 AM
Last Updated : 26 Apr 2022 05:46 AM

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான மின்சார ரயில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறிய மின்சார ரயிலை அங்கிருந்து அகற்றி மற்றொரு தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படம்: ம.பிரபு

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான மின்சார ரயில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தொடர் விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை பணிமனையில் இருந்து முதலாவது நடைமேடைக்கு வந்த மின்சார ரயில், திடீரென ஓட்டுநர் பவித்ரனின் கட்டுப்பாட்டை இழந்து, நடைமேடையில் ஏறி, எதிரே இருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தின்போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும், விபத்தில் 2 பெட்டிகள் சேதமடைந்தன. சுமார் 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, சேதமடைந்த ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டு, அங்கிருந்து அகற்றப்பட்டன. இதையடுத்து, நேற்று அதிகாலை முதல் அந்த நடைமேடையில் இருந்து வழக்கமான ரயில்கள் இயக்கப்பட்டன.

விபத்து தொடர்பாக கடற்கரை ரயில் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 279, இந்திய ரயில்வே சட்டம் 51 மற்றும் 154 ஆகிய 3 பிரிவுகளின் கீழ், விபத்துக்குள்ளான ரயிலின் ஓட்டுநர் பவித்ரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த, மூத்த எலெக்ட்ரிகல் இன்ஜினீயர், மூத்த மெக்கானிக்கல் இன்ஜினீயர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரி ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவை தெற்கு ரயில்வே பாதுகாப்பு பிரிவு அமைத்துள்ளது. இந்தக் குழு விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டு, தனது விசாரணையை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x