Published : 26 Apr 2022 06:30 AM
Last Updated : 26 Apr 2022 06:30 AM
புதுடெல்லி: கூடங்குளம் அணுமி்ன் நிலைய கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றி சேகரிப்பதற்கான ஆழ் புவி கிடங்கு அமைக்க வரும் ஜூலை 2026 வரை அவகாசம் தேவைஎன, தேசிய அணுசக்தி ஆராய்ச்சி கழகம் உச்ச நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இயங்கிவரும் அணு மின் நிலையத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள்நடைபெற்றன. கூடங்குளம் அணு உலையில் உருவாகும் அணுக்கழிவுகளை அணு உலைகளிலிருந்து தொலைதூரத்தில் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எனக்கூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூடங்குளம் அணுஉலையில் உருவாகும் அணுக்கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்தி பாதுகாக்க கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த கட்டமைப்பை உருவாக்கும் வரை அணு உலையின் அன்றாட செயல்பாட்டுக்கு தடை விதிக்கவேண்டும், எனக்கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில், சவுந்தரராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், உரிய கட்டமைப்பு உருவாக்கப்படாததால் அணுஉலையில் உருவாகும் கழிவுகள் அங்கேயே சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது, என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், ‘கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை இல்லை என்றும், ஆனால், நிரந்தரமாக அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வெளியேற்றி சேகரிப்பதற்கான ஆழ் புவி கிடங்கை 5 ஆண்டுகளில் ஏற்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது.
இந்த 5 ஆண்டு அவகாசம் கடந்த 2018மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், இந்த அவகாசத்தை மேலும் 5 ஆண்டுகள்நீட்டிக்க வேண்டுமென இந்திய அணுசக்தி கழகம் கடந்த 2018 பிப்ரவரியில் மனுதாக்கல் செய்திருந்தது. அதில் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான தொழில்நுட்பம் முழுமை பெறாத நிலையில் அந்தக்கட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கல் உள்ளது என்றும், எனவே இந்த அவகாசத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும், என கோரியிருந்தது. அதையேற்ற உச்ச நீதிமன்றம், இந்த அவகாசத்தை 2022 ஏப்ரல் இறுதி வரை நீ்ட்டித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கூடுதலாக 5 ஆண்டுகள், அதாவது வரும் ஜூலை 2026 வரை அவகாசம் வழங்கக்கோரி இந்திய அணுசக்தி ஆராய்ச்சி கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றி சேகரிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான கால அவகாசத்தை இனிமேலும் நீட்டிக்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டுமென கோரப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், அணுக்கழிவை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான கால அவகாசத்தை வரும் மே 4 வரைநீட்டித்தனர். மேலும், மீண்டும் 50 மாதங்கள்கால அவகாசம் கோரும் மனுவுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 4-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT