

வாக்குப்பதிவு ஒத்திவைக்கப் பட்டுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் கே.எம்.செரீப் தலைமை வகித்தார்.
தஞ்சை, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் 2 முறை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். ஜூன் 7-ம் தேதி ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்கப்பட உள்ளது. நோன்பு காலத்தில், தேர்தல் நடந்தால் முஸ்லிம்கள் வாக்களிப்பது சிரமம். மேலும், இந்த தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜூன் 11-ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க இயலாமல் போகும்.
இதனை கருத்தில் கொண்டு இந்த தொகுதிகளில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். எனினும், புதிய பேருந்து நிலையம் அருகிலேயே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்தனர்.
வணிகர் சங்கங்களின் பேரவை...
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தஞ்சையில் நேற்று நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மீண்டும் ஆட்சி அமைத்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது. தஞ்சை தொகுதி வாக்காளர்கள் முதல்வரை தேர்வு செய்யும் உரிமை இல்லாமல் போனதற்கு வணிகர் சங்கங்களின் பேரவை வருத்தப்படுகிறது.
தஞ்சை தொகுதியில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் உடனே நடத்த வேண்டும். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்து இருப்பது போல வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும். தஞ்சை நகரில் கைவரிசை காட்டிவரும் செல்போன் திருடர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக பொருளாளர் ஆத்மநாதன் நன்றி கூறினார்.