

சென்னை: "திமுக அரசு கொண்டுவந்துள்ள துணை வேந்தர் நியமன மசோதா அரசியல் காழ்ப்புணர்ச்சி தானே தவிர, வேறெதுவும் கிடையாது. தமிழக ஆளுநரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், நன்றாக செயல்படக்கூடிய உயர் கல்வித் துறையில் அரசியலை புகுத்தி, அதன்மூலமாக மாணவர்களின் நலனை கெடுக்க வேண்டும் என்று திமுக அரசு நினைக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "தமிழகத்தில் திமுக துணை வேந்தர்கள் பதவி என்பதை ஒரு வியாபார பொருளாக, ஆளுங்கட்சியைச் சார்ந்த, ஆளுங்கட்சியை ஆதரிக்கக்கூடியவர்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரு பதவியாக அதை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 1949-ல் குஜராத்தில் வந்துள்ளது என்று முதல்வர் பாராட்டித்தான் பேசியிருக்கிறார். முதல்வர் குறையாக சொல்லவில்லை.
காரணம் என்னவென்றால், பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் பாஜக அந்த தனித்துவமான நிலையை அடைந்திருக்கிறது. குஜராத்தில் இன்றும் கூட மாற்றப்படவில்லை, அரசு வைத்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் தனித்துவம். அதாவது அரசு தலையிடாமல், தனித்துவத்துடன் துணை வேந்தர்களை நியமித்துக் கொண்டிருப்பதால்தான் அது சரியாக இருக்கிறது.
ஆனால், தமிழகத்தில், அது நடக்கும் என்ற நம்பிக்கை கிடையாது. காரணம் தமிழகத்தில் அரசியல் கலந்துவிட்டது. குறிப்பாக திமுக இதற்கு முன்னால் துணை வேந்தர் பதவிகளை எப்படியெல்லாம் வியாபார பொருளாக விற்பனை செய்துள்ளனர் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் இன்றைக்கு நடைமுறை என்ன, ஒரு தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இருக்க வேண்டும். மாநில அரசு பரிந்துரைக்கக்கூடிய ஒருவர் அந்த குழுவில் இருப்பார். அந்தப் பல்கலைக்கழகத்தின் செனட் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் இருப்பார். மூன்றாவது நபர் ஆளுநரால் நியமிக்கப்படும் நபர் தேடுதல் குழுவின் தலைவராக இருப்பார். இதில் மாநில அரசுக்கும் உரிமையுண்டு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம், ஆளுநரால் நியமிக்கப்படுபவர் என மூன்று பேருக்கும் உரிமை உள்ளது.
துணை வேந்தர் பதவிக்கு வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து இந்த மூன்று பேரும் கலந்தாலோசித்து, 3 பேரை தேர்ந்தெடுத்து ஆளுநருக்கு அனுப்பிவைப்பர். ஆளுநர் இதில் ஒருவரை பரிந்துரைத்து துணை வேந்தராக நியமனம் செய்வார். தற்போது ஆளுநர் யாரையும் நேரடியாக நியமனம் செய்யவில்லை. தேடுதல் குழு பரிந்துரைத்தவர்களைத்தான் ஆளுநர் நியமனம் செய்து வருகிறார். அந்த தேடுதல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதி இருக்கும்போது, சிண்டிகேட் உறுப்பினரும் ஏறக்குறைய மாநில அரசைச் சார்ந்தவர்தான் என்ற நிலையில், எங்கிருந்து பிரச்சினை வருகிறது. எனவே இது நன்றாக சுமுகமாக செல்லக்கூடிய முறை.
கடந்த முறை ஆளுநராக இருந்தவரும், தற்போது ஆளுநராக இருப்பவரும் தமிழகத்தில் தகுதியான துணை வேந்தர்களை நியமிப்பதை ஏகமனதாக மக்கள் பாராட்டும்போது, திமுக அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதா அரசியல் காழ்ப்புணர்ச்சி தானே தவிர வேறெதுவும் கிடையாது. தமிழக ஆளுநரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், நன்றாக செயல்படக்கூடிய உயர்கல்வித்துறையில் அரசியலை புகுத்தி, அதன்மூலமாக மாணவர்களின் நலனை கெடுக்க வேண்டும் என்று திமுக அரசு நினைக்கிறது.
தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொள்ளாமல், அரசியல் காரணங்களுக்காக இதை திணிப்பதைக் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மகராஷ்டிராவில் கொண்டுவந்துகூட இந்த முறையை நடைமுறைப்படுத்த முடியவில்லை. மேற்கு வங்கத்தில் இந்த மசோதாவை கொண்டு வந்து ஆளுநர் ஒரு துணை வேந்தரை நியமித்து அங்குள்ள குழு ஒருவரை நியமித்து, அங்கும் இதுவொரு பிரச்சினையாக உள்ளது" என்று அவர் கூறினார்.