

சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில் டிராவல் ஏஜென்சி நடத்தி வந்த பாபுசிங் (50) என்பவர் கடந்த 3-ம் தேதி மாலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக யானைக்கவுனி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை குறித்து விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாபுசிங்கின் கடையிலும், பக்கத்து கடைகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளியின் உருவம் பதிவாகி இருந்தது. அதில், நடந்து வரும் 2 நபர்களில் ஒருவர் கையில் துப்பாக்கியை எடுத்து பாபுசிங்கை சுடுவதும், அவர் கீழே விழுந்ததும் கொலையாளிகள் இருவரும் ஆட்டோவில் தப்பி செல்வதும் பதிவாகியிருந்தன.
கண்காணிப்பு கேமராவில் பதிவான இரண்டு பேரின் புகைப்படங்களை வைத்து மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பதுங்கியிருந்த ராகேஷ் ரித்தோர்(23), அவரது கூட்டாளி டிக்கம்பர்(21) ஆகியோரை கடந்த 23-ம் தேதி சென்னை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களின் தலைவனாக ஹக்கிம் என்பவர் செயல்பட்டது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் ஒரு சிறிய கிராமத்தில் பதுங்கி இருந்த ஹக்கிமை மும்பை போலீஸ் உதவியுடன் சென்னை போலீஸார் நேற்று முன்தினம் இரவில் சுற்றி வளைத்துள்ளனர். ஆனால் போலீஸார் வருவதை அறிந்து கடைசி நிமிடத்தில் ஹக்கிம் தப்பி சென்று விட்டார்.
ராகேஷ், டிக்கம்பர் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் கொடுத்து பாபுசிங்கை கொலை செய்யுமாறு கூறியிருக்கிறார் ஹக்கிம். அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும். தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், தற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து பாபுசிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதும், அதில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாபுசிங்குக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் சொத்து பிரச்சினைகள் இருப்பதாகவும், அதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களில் ராகேஷ் ரித்தோருடன் வந்த டிக்கம்பருக்கு, டிக்கா மற்றும் சுமன் என பல பெயர்கள் உள்ளன. தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் மகாராஷ்டிரா காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.