

வேலூர்: வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதி அளிக்காததால் வகுப்பறையில் இருந்த மேஜைகளை அடித்து உடைத்த மாணவர்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் சிலர் வகுப்பறையில் உள்ள மேஜைகளை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் செந்தில்குமார், வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் சம்பத் ஆகியோர் பள்ளியில் இன்று (ஏப்.25) விசாரணை நடத்தினர். இதில், வகுப்பறையில் மேஜைகளை உடைத்தது பிளஸ் 2 ‘சி’ பிரிவு மாணவர்கள் என்று தெரியவந்தது.
வகுப்பறையில் மேஜைகளை உடைத்த மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாணவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளியில் இறுதியாண்டு என்பதால் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதிக்கவில்லை என்பதால் இதைச் செய்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு அறிவுரை கூறிய வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, ‘உங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறாமால் இப்படி செய்கிறீர்கள். பிரவு உபச்சார விழா நடத்த அனுமதியில்லை என்பதற்காக மேஜையை உடைப்பதா? என்றுகேள்வி எழுப்பினர். பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் அனைவரும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனை நேரில் சந்தித்தனர். ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை கூறி ஆலோசனைகளை வழங்கினார்.
பள்ளி வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாக 10 மாணவர்களை வரும் 4-ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்க உத்தரவிடப்பட்டது. மேலும், வரும் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வரலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெற்றோருடன் வந்து மாணவர்கள் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கூறும்போது, ‘‘பள்ளி மாணவர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய தலைமை ஆசிரியருக்குத்தான் அதிகாரம் உள்ளது. அவருக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பள்ளியில் மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நன்றாக படித்து பெற்றோர்களுக்கும், சமுதாயத்திற்கும் நன்மையும், பெருமையும் சேர்ப்பவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு மூலம் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்’’ என்று தெரிவித்தார்.