தூத்துக்குடி மாணவி சோபியா வழக்கில் தமிழிசை சவுந்தரராஜன் விடுவிப்பு: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு 

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்.
தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

மதுரை: தூத்துக்குடி மாணவி சோபியா தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரும் மனுவில், தமிழிசை சவுந்தரராஜன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சேர்க்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோபியா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'நான் கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன். கடந்த 2019 செப்டம்பர் 3-ல் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தேன். அதே விமானத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற நேரம். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. இதனால், விமானத்தில் இருந்து இறங்கும்போது மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்தேன்.

அதைக் கேட்ட தமிழிசை சவுந்தரராஜன், விமான நிலையத்தில் என்னை மிரட்டும் நோக்கத்தில் என்னைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆனால் தூத்துக்குடி, புதுக்கோட்டை போலீஸார் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், என் மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சோபியா மீதான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

பின்னர், தமிழிசை சவுந்தரராஜன் தற்போது ஆளுநராக இருப்பதால் எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படுகிறது. அவருக்கு பதில் சம்பவம் தொடர்பாக முதலில் புகார் அளித்த தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in