பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

சென்னை: பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், பெண்களை ஆபாசமாக சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி தருமபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மதன் குமார் என்கிற மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது. அதிகாரிகள், மனதைச் செலுத்தாமல் தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய நாட்டின் பப்ஜி விளையாட்டு.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதரார் குன்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தபோது அளித்த கோரிக்கை மனுவை அரசும், காவல்துறையும் உரிய காலத்தில் பரிசீலிக்கவில்லை. எனவே அவரை குன்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in