Last Updated : 25 Apr, 2022 01:00 PM

1  

Published : 25 Apr 2022 01:00 PM
Last Updated : 25 Apr 2022 01:00 PM

இளையராஜாவை சாதி ரீதியாக விமர்சிக்கவில்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன் சிறப்புப் பேட்டி

இசையமைப்பாளர் இளையராஜாவை சாதி ரீதியாக விமர்சிக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கமளித்துள்ளார்.

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அந்தப் புத்தகத்தில், பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார் இளையராஜா. இது பெரும் சர்ச்சையானது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''பணம் வந்துவிட்டால் நீங்கள் உயர்ந்த சாதி ஆகிவிட முடியாது. தமிழகத்தில் சில அகராதிகள் இருக்கிறார்கள். கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் எனச் சொல்லி கொள்கிறார்கள். இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசையமைப்பாளராக ஆகிவிட முடியாது.

வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாதபோது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள், பணமும் புகழும் வந்த பிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வது என்ன நியாயம்? நான் யாரைச் சொல்கிறேன் என உங்களுக்கு தெரிந்திருக்கும். வயது 80க்கு மேல் ஆகிறது. இளையராஜா பக்திமான் ஆவது உங்கள் விருப்பம். அதை நான் தவறென்று கூற மாட்டேன். அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்?'' என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், '''பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த சாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும்... இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது'' என்று பதிவிட்டிருந்தார்.

`மூடர் கூடம்` படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பெரியாரையும் அம்பேத்கரையும் உள்வாங்காததால்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரசில் சேர்ந்தார். பிறப்பின் அடிப்படையில் அறிவு வருவதில்லை என்பதற்கு இவரே உதாரணம். இளையராஜா கருத்தை விமர்சிக்காமல் அவரையும் அவர் சாதியையும் விமர்சிப்பது பெரியாரிய மேடைக்கு உகந்ததல்ல'' என்று பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக இந்து தமிழுக்கு விளக்கமளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ''நான் அவரை சாதி ரீதியாக விமர்சிக்கவில்லை. அவருக்கு சங்கராச்சாரியார் என நினைப்பு என்று தான் கூறினேன். நான் என்ன கூற வந்தேன் என்றால், பசி பட்டினியாக இருக்கும்போது கம்யூனிச கொள்கைகளை பேசுகிறார்கள். கையில் பணம் வந்ததும், தங்களை சங்கராச்சாரியார் என நினைத்துக்கொள்கிறார்கள். சங்கராச்சாரியார் கூட ஜெயிலுக்கு போனவர்தான். சாதி ரீதியாக நான் யாரையும் விமர்சிக்கவில்லை.

அவருடைய நடவடிக்கை குறித்துதான் பேசினேன். அம்பேத்கர் எவ்வளவு பெரிய ஆளுமை அவருடன் மோடியை ஒப்பிடுகிறார்களே என்ற வருத்தம் தான் எனக்கு. வேண்டுமென்றால், அவர் மோடியை முசோலினி, ஹிட்லருடன் ஒப்பிட்டுக்கொள்ளட்டும். ஆனால், அம்பேத்கர் இதிலிருந்து வேறுபட்ட தலைவர். சாதி, மதங்களுக்கெல்லாம் அப்பாற்றப்பட்ட தலைவர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x