

கோவை: தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற செந்தலை ந.கவுதமன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு, சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி தலைமையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசும்போது, “சூலூருக்கும் சுயமரியாதை கொள்கைக்கும் நிறைய தொடர்பு உண்டு.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை பெரியார் அவமரியாதை செய்தது இல்லை. குன்றக்குடி அடிகளார் இருக்கையில் அமர்ந்திருந்த போது அவருக்கு இணையாக உட்கார மறுத்தவர். ஆதிக்க சக்திகளைத்தான் அவர் வெறுத்தார். காஞ்சி பெரியவர் மயிலாப்பூர் வந்தபோது தி.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை கேள்விப்பட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி காஞ்சிப் பெரியவருக்கு பாதுகாப்பு கொடுத்தார். பிறர் உணர்வுகளை மதித்தவர். ஆனால், இப்போது அந்த உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது”என்றார். இந்த விழாவில் சூலூர் தமிழ்ச் சங்க தலைவர் பொன்முடி, மன்னவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.