

நிதி வசதிமிக்க கோயில்களில் இருந்து மானியம் பெற்று, வருவாய் இல்லாத கோயில்களை சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இதில் சுமார் 35 ஆயிரம் கோயில்களின் ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவு. அதில் பல கோயில்கள் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட புராதன கோயில்கள்.
தமிழகத்தில் 12,959 கோயில்களில் ஒரு வேளை பூஜை நடத்தும் அளவுக்குகூட வருவாய் இல்லாததால் ஒருகால பூஜை திட்டத்தில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. போதிய வருவாய் இல்லாததால், இக்கோயில்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன. அவற்றை முறையாக சீரமைத்து பராமரித்து பாதுகாப்பது இத்துறையின் முக்கிய கடமை.
நிதி வசதி மிக்க கோயில்களின் உபரி நிதியை, திருப்பணிக்காக நிதி உதவி தேவைப்படும் பிற கோயில்களுக்கு மானியமாக வழங்கினால் பல்லாயிரக்கணக்கான கோயில்களை சீரமைத்து, திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய இயலும். எனவே, நிதி வசதிமிக்க கோயில்களில் இருந்து மானியம் பெற்று, போதிய வருவாய் இல்லாத கோயில்களை சீரமைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் அனைவரும் தங்கள் மண்டலம், சரகத்தில் உடனடியாக ஆய்வு செய்து நிதி நிலையை பரிசீலித்து, நிதி உதவி தேவைப்படும் கோயில்களின் பட்டியலை தயாரிக்க வேண்டும். நிதி உதவி அளிக்கக்கூடிய அளவில் உபரி நிதி உள்ள கோயில்களின் பட்டியலை, நிதி வசதி இல்லாத கோயில்களின் நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும்.
நிதி உதவி தேவைப்படும் கோயில்களின் நிர்வாகிகள் திருப்பணி வேலைகளுக்கான விரிவான மதிப்பீடுகளை தயாரித்து, அதன் அடிப்படையில் தேவைப்படும் நிதியை மானியமாக வழங்கக் கோரி நிதி வசதிமிக்க கோயில்களின் நிர்வாகிகளுக்கு எழுத்துப்பூர்வமாக மனு அளிக்க வேண்டும். நிர்வாக, தொழில்நுட்ப அனுமதி அடிப்படையில், விதிகளை பின்பற்றி திருப்பணிகள் தொடங்க வேண்டும் என்று அனைத்து சார்பு நிலை அலுவலர்கள், கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது