Published : 25 Apr 2022 06:55 AM
Last Updated : 25 Apr 2022 06:55 AM
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசனும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: நீட் விலக்கு மசோதா உட்பட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்த நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் பேராசிரியர்களுடன் கலந்துகொள்ளும் மாநாட்டை கூட்டியுள்ளார்.
போட்டி அரசு நடத்துகிறார்
ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தர் பொறுப்பில் உள்ள உயர்கல்வித் துறை அமைச்சரின் பங்கேற்பு குறித்த தகவல் இல்லை.
மாநில சட்டப்பேரவை மற்றும்அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டியகடமைப் பொறுப்பில் உள்ளவர் ஆளுநர். ஆனால் அவரின் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்ட அத்துமீறல் என்பதுடன் மக்கள் பிரதிநிதி ஆட்சி முறைக்கு எதிராக தலையிட்டு, போட்டி அரசை நடத்தும் அதிகபட்ச அத்துமீறலாகும். தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்று செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
அரசியல் அமைப்புச் சட்டம்மாநில அரசுக்கும் மக்களாட்சிக்கும் வழங்கியுள்ள சட்ட உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் கூட்டியுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த மாநாட்டை துணை வேந்தர்களும், பேராசிரியர்களும் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் கூட்டியுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதல்வர் அல்லது உயர்கல்வித் துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், மாநில அரசின் ஒப்புதல் பெறாமலும் ஆளுநர்இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதும் கண்டிக்கத்தக்கது.
அரசியல் சட்டத்துக்கு எதிரானது
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் அவருக்கு இத்தகைய அதிகாரங்களை அரசியல் சட்டம் வழங்கவில்லை. அரசியல் சட்டத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை பறிக்கும் செயலாகும்.
எனவே, ஆளுநர் கூட்டியுள்ளஇந்தகூட்டத்தில் துணைவேந்தர்கள் உட்பட யாரும் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டிய கடமை உயர்கல்வித் துறை அமைச்சருக்கு உள்ளது. அதை அவர் உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT