

இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் ரத்தாவதற்குக் காரணமான வேட்பாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணமும் பிற பொருட்களும் விநியோகிக்கப்பட்டதன் அடிப்படையில் தேர்தலை ஒத்திவைத்த தேர்தல் ஆணையம் தற்போது அதை ரத்து செய்திருக்கிறது.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்குப் பிறகும்கூட பணம் விநியோகிக்கப்பட்டது என அரவக்குறிச்சி தேர்தல் சிறப்புப் பார்வையாளர் அறிக்கை அளித்திருக்கிறார். பணம் விநியோகம் தொடர்பாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்குப் பிறகு 11 புகார்கள் வந்ததாகவும் மே 18ஆம் தேதியன்று ரூபாய் 5.72 இலட்சம் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தேர்தல் ஜனநாயகத்திற்கே மிகப் பெரும் தலைகுனிவாகும்.
இந்தியத் தேர்தல் வரலாற்றில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது என்ற காரணம் காட்டி தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை. தமிழ்நாடு முழுவதும் வரம்பின்றி வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதையும் அதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதையும் ஏற்கெனவே நாம் சுட்டிக்காட்டி வந்தோம். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எமது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் விநியோகித்தது யார் என்பதை ஏற்கெனவே தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதை அந்த வேட்பாளர்களின் தனிப்பட்ட தவறு எனப் பார்க்க முடியாது. அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் குற்றமாகவே கருதப்பட வேண்டும்.
எனவே, இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் ரத்தாவதற்குக் காரணமான வேட்பாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளிலும் பணம் விநியோகிக்கும்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதைக் கைப்பற்றி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி எந்தெந்தத் தொகுதிகளில் பணம் கைப்பற்றப்பட்டது? அதனை வைத்திருந்தவர்கள் எந்தக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் என்ற விவரங்களை வெளிப்படையாக பொதுமக்கள் பார்வைக்கு தேர்தல் ஆணையம் முன்வைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
அதனடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வரையறுத்துள்ள வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை குற்றம் இழைத்தவர்கள் மீதும் அவர்கள் சார்ந்த கட்சிகளின் மீதும் எடுப்பதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.