Last Updated : 25 Apr, 2022 07:44 AM

 

Published : 25 Apr 2022 07:44 AM
Last Updated : 25 Apr 2022 07:44 AM

காஞ்சி மாநகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் 8 மாதங்களாக ஜெனரேட்டர் பழுது உயிரி எரிவாயு மின்சார உற்பத்தி பாதிப்பு

திருக்காலிமேடு குப்பை கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள உயிரி எரிவாயு மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் பழுதடைந்த நிலையில் உள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில், கடந்த 8 மாத காலமாக பழுதடைந்துள்ள ஜெனரேட்டரை சீரமைக்காததால், உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் உயிரி எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 22-வது வார்டு திருக்காலிமேட்டில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு மற்றும் கழவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளன. இங்கு, கடந்த 2016-ம் ஆண்டு உயிரி எரிவாயு திட்டத்தின் கீழ் மின்சாரம் தயாரிக்கும் பிரிவு அமைக்கப்பட்டது. இதன்படி, 900 க்யூபிக் மீட்டர் சேமிப்புத் திறன் கொண்ட பலூன், உணவு, காய்கறி மற்றும் இறைச்சி கழிவுகளை அரைக்கும் இயந்திரம், உயிரி எரிவாயு தயாரிக்கும் கலன் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இதில், உணவு உள்ளிட்ட கழிவுகளை அரைப்பது, உயிரி எரிவாயு தயாரிப்பு, மின்சார உற்பத்தி போன்ற பணிகளை ஒப்பந்ததாரர் மூலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. உயிரி எரிவாயுவை மின்சாரமாக மாற்றுவதற்கான ஜெனரேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 440 கி.வோ. மின்சாரம் உற்பத்தி செய்து, குப்பை கிடங்கு வளாகத்தில் உள்ள 55 மின்விளக்குகள் ஒளிரவைக்கப்பட்டு வந்தன.

இதன்மூலம், மாநகராட்சி நிர்வாகத்துக்கு மின் கட்டண செலவு குறைந்திருந்தது. இந்நிலையில், உயிரி எரிவாயு மின் உற்பத்தி வளாகத்தில் மின்சாரம் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர், கடந்த 8 மாதத்துக்கு முன்பு பழுதடைந்தது. ஆனால், மாதங்கள் பல கடந்தும் பழுதை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதால், உயிரி எரிவாயு மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஜெனரேட்டரை சீரமைத்து மின்சார உற்பத்தியை தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறியதாவது: ஜெனரேட்டர் பழுதடைந்துள்ளதால் கடந்த 8 மாதகாலமாக உயிரி எரிவாயு மற்றும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், உணவு உள்ளிட்ட கழிவுகளும் வீணாக குப்பையில் கொட்டப்படுகின்றன. இந்த ஜெனரேட்டர், பழுது நீக்கப்பட்டால் மீண்டும் உயிரி எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து குப்பை கிடங்கு வளாகம் மற்றும் அப்பகுதிக்கு செல்வதற்கான பிரதான சாலையாக கருதப்படும் கவரைத் தெரு, திருவீதிப் பள்ளம் ஆகிய பகுதியில் உள்ள மின்விளக்குகளை ஒளிரச் செய்யலாம். தற்போது மின்தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், இப்பணிகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயிரி எரிவாயு மின்உற்பத்தி வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள ஜெனரேட்டரில் சில கருவிகளை மாற்ற வேண்டியுள்ளது. தேவையான கருவிகளை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ஜெனரேட்டர் பழுது சீரமைக்கப்பட்டு, மீண்டும் உயிரி எரிவாயு மின்சார உற்பத்தி தொடங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x