Published : 25 Apr 2022 07:37 AM
Last Updated : 25 Apr 2022 07:37 AM

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான மசோதாக்கள் விவாதிக்காமலேயே நிறைவேற்றம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பினோய் விஸ்வம் புகார்

திருவள்ளூர்: ஆவடி படை உடை தொழிற்சாலை ஊழியர்கள் சங்க வைர விழாவின் 5-வது தொடர் கருத்தரங்கம் நேற்று ஆவடி ஓசிஎப் ஒர்க்கர்ஸ் யூனியன் பொன் விழா அரங்கில் நடைபெற்றது.

‘இந்திய நாடளுமன்றத்தில் என்ன நடக்கிறது’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கம், ஆவடி படை உடை தொழிற்சாலை ஊழியர்கள் சங்கத்தின் செயல் தலைவர் என்.ஜெ.ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்திந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் குமார் அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து, 5 எம்பிக்கள் சிறப்புரையாற்றினர்.

இதில், இந்திய தேசிய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேசும்போது, “ஜவஹர்லால் நேரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் பெருகின. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். தனியார் ஒரு நிறுவனத்தை நஷ்டமில்லாமல் நடத்த முடியும், அரசால் நடத்த முடியாது என்றால் அது அரசுக்கு அவமானமல்லவா?” என்றார்.

திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, “நாடாளுமன்றத்தில் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை. விதிகள் அனுமதிக்கும் உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. உயிர்த் தியாகம் செய்து பெற்ற, தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஒன்றிய அரசு எதில் தலையிட வேண்டுமோ அதில் தலையிடுவதில்லை. எதில் தலையிட வேண்டாமோ அதில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பினோய் விஸ்வம் பேசும்போது, “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான மசோதாக்கள் விவாதத்துக்கு அனுமதிக்காமலேயே நிறைவேற்றப்படுகின்றன. கடந்த காலங்களில் 70 சதவீத மசோதாக்கள் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும். ஆனால் இப்போது எந்த மசோதாவும் அனுப்பப்படுவதில்லை. இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் பேசும்போது, “நாடாளுமன்றம், கடந்த 8 ஆண்டுகளாக சிலுவையில் அறையப்பட்ட நிலையில் உள்ளது. ஜனநாயக அமைப்புக்குள் இருந்து கொண்டே அதை அழிக்கும் பணியை பாஜக மேற்கொண்டு வருகிறது” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் பேசும்போது, “நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர்களின் கேள்விகளை செவிமடுத்து கேட்பதில்லை, அதற்கு பதிலளிப்பதும் இல்லை. எந்த விவாதமும் இன்றி 4 நிமிடங்களில் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

17-வது மக்களவையில் ஒரு மசோதா மட்டுமே நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் பண்பாட்டுத் தன்மையை, மொழித் தன்மையை சீர்குலைத்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் இந்தியில் பதில் அனுப்புகிறார்கள். ஆங்கிலத்தை அகற்றி விட்டு இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். ஜனநாயக மாண்புகள் முற்றிலுமாக சீர்குலைக்கப்படுகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x