Published : 01 May 2016 10:26 AM
Last Updated : 01 May 2016 10:26 AM

இலவசங்களை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் வழிமுறைகளை வகுக்க வேண்டும்: ‘கஸ்தூரி அண்ட் சன்ஸ்’ இயக்குநர் என்.ரவி வலியுறுத்தல்

அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ‘தி இந்து’ மையம் சார்பில் ‘தமிழ்நாட்டில் நல அரசியல்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘கஸ்தூரி அண்ட் சன்ஸ்’ இயக்குநர் என்.ரவி, ‘விஐடி’ பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், முன்னாள் மத்திய நிதிச் செயலாளர் எஸ். நாராயண், பொருளாதார நிபுணர் ஏ.வைத்தியநாதன், அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் ஆர்.கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் தற்போது நடப்பில் இருக்கும் பல்வேறு நலத் திட்டங்கள், தேர்தல் நேர வாக்குறுதிகளாக வழங்கப்படும் இலவசங்கள் போன்றவற்றின் விளைவுகள் பற்றி இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இதில் ‘கஸ்தூரி அண்ட் சன்ஸ்’ இயக்குநர் என்.ரவி பேசியதாவது: தமிழ்நாட்டில் தற்போது புதுமையான பல திட்டங்களுக்காகப் பல ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்காக செலவழிக்கப்படும் நிதியை மக்களுக்குப் பயன்படும் சமூக நலத் திட்டங்களுக்காகவும், மாநிலத்தின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பயன் படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

நடுத்தர வர்க்க மக்களுக்கு மிக்ஸியும், கிரைண்டரையும் இலவசமாக வழங்குவதை விட ஏழை மக்களுக்கான கல்வியையும், வேலைவாய்ப்பையும் உறுதிசெய்யும்விதமாக நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தேர்தல் நேர வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் வழிமுறை களை வகுக்கவேண்டும். அப்போதுதான், தேர்தலின்போது இயல்புக்கு மாறாக அறிவிக்கப்படும் இலவசங்களை நம்பி மக்கள் ஏமாறுவது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘விஐடி’ பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசும்போது, “தற்போது நடப்பில் இருக்கும் அரசு மானியங்களில் பெரும்பாலானவை தேவையற்றவை. இந்த மாதிரி தேவையில்லாத மானியங்கள் வழங்குவதால்தான் அரசுக்கு கடன் நெருக்கடி ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமான மானியங்கள் மக்களை சோம்பேறிகளாக்கி விடும் அபாயமும் உள்ளது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு உதவவேண்டும் என்று நினைத்தால் அவர்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்” என்றார்.

முன்னாள் மத்திய நிதிச் செயலாளர் எஸ். நாராயண் பேசும்போது, “தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை மீறிய நலத் திட்டங்கள் நடைமுறையில் இருப்பது உண்மை. ஆனால், மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நலத் திட்டங்கள் அதிகமாக வெற்றியடைகின்றன. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் உலக வங்கியின் உதவியோடு நடைமுறைப்படுத்தப்பட்ட சத்துணவு திட்டம் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டத்தால் பல குழந்தைகள் கல்வி பயின்றனர். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தது. ஆண் குழந்தைகளுக்கு இணையாகப் பெண் குழந்தைகளும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். 1980-களில் உண்மையான சமூக மாற்றத்தை உருவாக்கிய நலத் திட்டமாக இதைச் சொல்லலாம். ஆனால், இப்போது அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களும், மானியங்களும் உண்மையாக மக்கள் நலனைக் கருத்தில்கொண்டதாக இருப்பதில்லை” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x