Published : 25 Apr 2022 06:12 AM
Last Updated : 25 Apr 2022 06:12 AM

திமுக நிர்வாகிகள் 100 பேருக்கு தங்க மோதிரம்: கனிமொழி எம்.பி. வழங்கினார்

உடன்குடி அருகே தண்டுபத்தில் நடந்த கூட்டத்தின்போது, தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்கு கனிமொழி எம்.பி. தங்க மோதிரம் வழங்கினார். உடன் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி/கோவில்பட்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு, கடந்த மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றிய திமுக நிர்வாகிகள் 100 பேருக்கு தலா 1 பவுன் தங்க மோதிரம் வழங்கினார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுகவினருக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (வைகுண்டம்), தொழிலதிபர் அனிதா ஆர்.அனந்தமகேஸ்வரன், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தெற்கு இலந்தைகுளம்

பஞ்சாயத்து ராஜ் நாளை முன்னிட்டு கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் ஊராட்சி ஆத்திகுளத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் வே.செல்வி தலைமை வகித்தார். கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கலந்துகொண்டனர்.

கனிமொழி எம்.பி. பேசும்போது, “ தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை நான் தத்தெடுத்து உள்ளேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும். இங்குள்ள துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் பணியமர்த்தப்படுவார். கயத்தாறில் இருந்து தேவர்குளம் செல்லும் சாலையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாலை சீரமைக்கப்படும். கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும். ஊராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும்” என்றார்.

தொடர்ந்து கடம்பூரில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டனர். ரூ.6.03 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x