சென்னை ஸ்மார்ட் நகர திட்டத்துக்கு தனி நிறுவனம் தொடங்க மாநகராட்சி தீவிரம்

சென்னை ஸ்மார்ட் நகர திட்டத்துக்கு தனி நிறுவனம் தொடங்க மாநகராட்சி தீவிரம்
Updated on
2 min read

ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்துக்காக முதல்கட்டமாக 20 நகரங்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி 28-ம் தேதி வெளியிட்டது. இதில் சென்னை, கோவை ஆகிய 2 நகரங்கள் இடம்பெற்றிருந்தன.

சென்னை மாநகரை ஸ்மார்ட் நகரமாக மாற்றுவதற்கான கருத்துருவை ரூ.1,366 கோடியில் தயாரித்து மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியிருந்தது.

இந்த திட்டத்துக்கான நிதியில் ரூ.1,000 கோடியை மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் தலா ரூ.100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கும். மீதம் உள்ள ரூ.366 கோடியை, மாநகராட்சி நிர்வாகம் தனது சொந்த நிதியிலிருந்து செலவிடும்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை பெற, மெட்ரோ ரயில் நிறுவனம் போல, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தை தொடங்க வேண்டும்.

தேர்தல் பணிகள் காரணமாக, கடந்த 3 மாதங்களாக தனி நிறுவனத்தை தொடங்க முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன” என்றார்.

மேலும் 13 ஸ்மார்ட் நகரங்கள் பட்டியல் அறிவிப்பு

'ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தின் கீழ் மேலும் 13 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ், 2019-20-க்குள் நாடு முழுவதும் உள்ள 100 நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.48 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்படும். இதுதவிர அந்தந்த மாநில அரசுகளும் நிதியுதவி வழங்கும்.

இதன்படி, 2015-16-ம் ஆண்டில் 20 நகரங்கள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டன. நடப்பு 2016-17-ல் 40 நகரங்களும் அடுத்த நிதியாண்டில் மீதம் உள்ள 40 நகரங்களும் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 13 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், லக்னோ முதலில் இடம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக, வாரங்கல் (தெலங்கானா), தர்மசாலா (இமாச்சலப் பிரதேசம்), சண்டீகர், ராய்பூர் (சத்தீஸ்கர்), நியூ டவுன் கொல்கத்தா, பாகல்பூர் (பிஹார்), பனாஜி (கோவா), போர்ட் பிளேர் (அந்தமான் நிகோபர் தீவுகள்), இம்பால் (மணிப்பூர்), ராஞ்சி (ஜார்க்கண்ட்), அகர்தலா (திரிபுரா) மற்றும் பரீதாபாத் (ஹரி யாணா) ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மீதம் உள்ள 27 நகரங்கள் இந்த நிதியாண்டுக்குள் அறிவிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஸ்மார்ட் நகரங்களாக மேம்படுத்த வலியுறுத்தி மாநில அரசுகள் சார்பில் மொத்தம் 23 நகரங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இதில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு ஆய்வு செய்த நமது தேர்வுக் குழு 13 நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களை மேம்படுத்துவதற்காக ரூ.30,229 கோடி முதலீடு செய்யப்படும். இத்துடன் இதுவரை அறிவிக்கப்பட்ட 33 ஸ்மார்ட் நகரங்களுக்காக மொத்தம் ரூ.80,789 கோடி முதலீடு செய்யப்படும்.

இதுவரை பட்டியலில் இடம்பெறாத பாட்னா (பிஹார்), சிம்லா (இமாச்சலப் பிரதேசம்), நயா ராய்பூர் (சத்தீஸ்கர்), இட்டாநகர் (அருணாச்சலப் பிரதேசம்), அமராவதி (ஆந்திர பிரதேசம்), பெங்களூரு (கர்நாடகா) மற்றும் திருவனந்தபுரம் (கேரளா) ஆகிய 7 மாநில தலைநகரங்கள் அடுத்த சுற்று போட்டியில் இடம்பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 13 நகரங்களில் பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து 4 நகரங்களும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலிருந்து 2 நகரங்களும் இடம் பிடித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in