Published : 24 Apr 2022 01:12 PM
Last Updated : 24 Apr 2022 01:12 PM

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன: டிஜிபி சைலேந்திர பாபு

திருநெல்வேலி: தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கொலைக் குற்றங்கள் 80 சதவீதம் குறைவு என்றும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பழவூரில் உச்சினி மாகாளி அம்மன் கோயில் கொடை விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. சுத்தமல்லி காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா (27) தலைமையிலான போலீஸார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பழவூர் பால்பண்ணைத் தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் ஆறுமுகம் (40) என்பவர் நேற்று அதிகாலையில் அங்கு வந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ மார்க்ரெட் தெரசாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென்று, மார்க்ரெட் தெரசாவை கத்தியால் ஆறுமுகம் குத்தினார். சுதாரித்துக் கொண்ட சக போலீஸார் ஆறுமுகத்தை வளைத்துப் பிடித்தனர். முகம், கழுத்து, தோள்பட்டை பகுதிகளில் பலத்த காயமடைந்த மார்க்ரெட் தெரசா, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும், மார்க்ரெட் தெரசாவை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சம்பவம் குறித்து தமிழக முதல்வர் தொலைபேசியில் மார்க்ரேட்டை தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் கூறி, அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று காயமடைந்த மார்க்ரேட்டுக்கு தைரியம் கொடுத்ததோடு, மேலும் அவருக்கு உடனடியாக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். அதற்காக காவல்துறையின் சார்பில் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக திறமையாக குடிபோதையில் ஆக்ரோஷமாக இருந்த குற்றவாளியை உடனடியாக மடக்கிப் பிடித்த மகளிர் காவலர் லட்சுமி, காவலர்கள் ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் காவல்துறை சார்பில் பாராட்டுக்களும் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் குடிபோதையில் இருக்கும்போது நிறைய தகராறுகள் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மீது வழக்குகள் எதுவும் இல்லை. ஒரு வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள் என்பதற்காக ஒரு மாதம் கழித்து திட்டமிட்டு இதுபோல தாக்குதல் நடத்தியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடிபோதையா அல்லது மனநிலை பாதிப்பா என்பது விசாரணையில் தெரியவரும்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 80 சதவீதம் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன. அதுவும் தென் மாவட்டங்களில் இந்த பழிக்குப்பழி கொலையெல்லாம் வழக்கமாகவே நடந்து கொண்டிருக்கும். ஆனால் கடந்த 8 மாதங்களாகவே அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x