Last Updated : 24 Apr, 2022 12:54 PM

1  

Published : 24 Apr 2022 12:54 PM
Last Updated : 24 Apr 2022 12:54 PM

புதுச்சேரிக்கு அமித் ஷா வருகை | எதிர்க்கட்சிகள் கறுப்புக் கொடி போராட்டம்; திமுக புறக்கணிப்பு

அமித்ஷா வருகையை எதிர்த்து புதுவையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், அமைப்புகள் இணைந்து கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீஸாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் திமுக பங்கேற்காமல் புறக்கணித்தது.

இந்தி மொழி கட்டாய திணிப்பைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் புதுவைக்கு வரும் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தன. இன்று காலை மத்திய அமைச்சர் அமித் ஷா புதுவைக்கு வந்தார். அதேநேரத்தில் புதுவை சாரம் அவ்வை திடலில் மத்திய அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராஜாங்கம், பெருமாள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், மோதிலால், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தேவபொழிலன், எழில்மாறன் மதிமுக கபிரியேல், வேதாவேணுகோபால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உமர், மனிதநேய மக்கள் கட்சி சகாபுதீன், திராவிடர் கழகம் அறிவழகன், சடகோபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாத அமித் ஷா திரும்பிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். திரும்பிப்போ, திரும்பிப்போ அமித் ஷாவே திரும்பிப்போ, திணிக்காதே, திணிக்காதே இந்தியை திணிக்காதே என கோஷம் எழுப்பியபடி கறுப்புக் கொடிகளை கையில் ஏந்தினர். அப்போது போலீஸார் அவர்கள் வைத்திருந்த கறுப்புக் கொடியை பறித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கறுப்புச் சட்டை அணிந்து வந்தவர்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. போலீஸார் கறுப்புசட்டை, கறுப்புக்கொடிக்கு அனுமதியில்லை என எச்சரித்தனர். இதையடுத்து கறுப்புக்கொடிகள் அங்கிருந்து அகற்றப்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், "மாநில அரசின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் மத்திய அரசின் உள் துறை அமைச்சரான அமித் ஷா புதுவையில் எந்த ஒரு திட்டத்தையும் புதிதாக தொடங்கி வைக்கவில்லை, தற்போது புதிய பேருந்து நிலையம், அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவைகள் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும் அதற்கு அடிக்கல் நாட்ட மட்டுமே அமித் ஷா புதுச்சேரிக்கு வருகிறார் எனவே அமித் ஷாவின் வருகையால் புதுச்சேரிக்கு எந்த ஒரு பயனும் இல்லை எனவேதான் அவரை திரும்பிப் போ என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்று குறிப்பிட்டனர். எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் புதுச்சேரி எதிர்க்கட்சியான திமுக பங்கேற்கவில்லை. கட்சித்தலைமையிடம் கேட்டு திமுக போராட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x