

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி களுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் சேர்த்து ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. பணப்பட்டுவாடா, அதிக அளவில் பணம் பிடிபட்டது உள்ளிட்ட காரணங்களால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் மே 23-ம் தேதிக்கு தேர்தலை தள்ளிவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர், தேர்தல் தேதி ஜூன் 13-க் கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, இந்த 2 தொகுதி களிலும் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ரம்ஜான் பண்டிகையை காரணம் காட்டி, தேர்தலை முன்கூட்டியே நடத் துமாறு முஸ்லிம் அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப் பட்டது.
இந்நிலையில், ஜூன் 1-ம் தேதிக் குள் 2 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கடிதம் எழுதினார். இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி மற்றும் ஆணையர்கள் சமீபத்தில் ஆலோசனை நடத்தி னர். இதில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கா னியும் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து அரவக்கு றிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதிகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், திருப்பரங் குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ்.எம். சீனிவேல் மரணமடைந்த தால், அந்தத் தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது. சீனிவேல் இறந்த தகவலை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் துறை தெரிவித்து விட்ட து.
ஆணையத்துக்கு கடிதம்
இதுதொடர்பாக சட்டப் பேரவைச் செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப் பப்படும். அதன்பிறகு, திருப்ப ரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப் பட்டு, அங்கு தேர்தல் நடத்தப்படும். அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிக ளுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக நிருபர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறி யதாவது:
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சீனிவேல், மரணமடைந்த தகவல் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை பெற்று, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. அங்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆணையம் முடிவெடுக்கும்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுடன் திருப்பரங் குன்றம் தொகுதிக்கும் சேர்த்து ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்.
தேர் தலில் போட்டியிட்ட வேட்பாளர் கள் அனைவரும் தங்களது முழுமையான செலவுக் கணக்கை ஜூன் 19-ம் தேதிக்குள் ஆணை யத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.210 கோடி செலவு
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ரூ.210 கோடி செலவிடப்பட்டுள் ளது. அதில், விளம்பரத்துக்கு ரூ.25 லட்சம் செலவாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்கீழ் நடந்த சோதனையில் ரூ.105.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், உரிய ஆவணங்களை அளித்தவர் களுக் கு ரூ.48 கோடி திருப்பி அளிக் கப்பட்டுள்ளது. மேலும் பலர், உரிய ஆவணங்களுடன் பறிமுதல் தொகைகளை திருப்பிக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப் பட்டு வருகின்றன.
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள், அதற்கென உள்ள கிடங்குகளில் பத்திரமாக வைக் கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்த 45 நாட்களுக்குள் தேர்தல் தொடர்பான மனுக்கள் வரும் என்பதால் அதற்கு முன்பாக இந்த இயந்திரங்கள் மற்ற இடங்களுக்கு அனுப்பப்படாது. அதன்பின், தேவைப்படும் மாநிலங்களுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக் கப்படும்.
தேர்தல் அறிவிக்கை வாபஸ்
அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் தொடர்பான அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. 2 தொகுதிக ளிலும் தேர்தல் நடத்துவதற்கான தேதியை ஆணையம் விரைவில் முடிவு செய்து அறிவிக்கும். திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலை 6 மாதத்துக்குள் நடத்த வேண்டும். எனவே, 2 தொகுதிகளுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கான தேர்தலையும் ஆணையம் அறிவிக்கலாம். 3 தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.