உலகப் பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்பின் 3 விருதுகளுக்கு தமிழக அரசு தேர்வு: நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா தகவல்

நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா | பட உதவி ட்விட்டர்
நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா | பட உதவி ட்விட்டர்
Updated on
1 min read

நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ஐசிஐடி) ஒவ்வோர் ஆண்டும் உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு விருதுகளை அறிவிக்கிறது.

இந்திய தேசிய நீர்ப்பாசனம் மற்றும்வடிகால் குழுமம், ஒவ்வோர் ஆண்டும்இந்திய மாநிலங்களில் இருந்து, தகுதியான முன்மொழிவுகளை ஐசிஐடி அமைப்புக்கு பரிந்துரைக்கிறது.

இதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழக நீர்வளத் துறை சார்பில்கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய 6 நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உலகப் பாரம்பரிய கட்டமைப்புகளாக அறிவிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணைய ஆய்வுக்குழு, தமிழக நீர்வளத் துறை விண்ணப்பித்த கட்டமைப்புகளை நேரில்ஆய்வு செய்தது. இதன் தொடர்ச்சியாக, உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி, காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டுக்கும் 4 விருதுகள் சர்வதேச அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு 4 விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழகம் 3 விருதுகள் பெறுவது குறிப்பிடத்தக்கது.

கல்லணை: வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்லணை கி.பி. 2-ம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான அணையாகும். இது உலகின் 4-வது பழமையான நீர்மாற்று அமைப்பு அல்லது நீர் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பாகும். இன்னும் பயன்பாட்டில் உள்ள பழமையான கட்டமைப்பாகும்.

வீராணம் நீர்த்தேக்கம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் நீர்த்தேக்கம் 9-ம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது.

காளிங்கராயன் அணைக்கட்டு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைக்கட்டு 740 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு பகுதி மன்னரான காளிங்கராயக் கவுண்டரால் கட்டப்பட்ட பழமையான அணையாகும். இந்தியாவில் இன்னும் பயன்பாட்டில் உள்ள பழமையான கட்டமைப்பாகும். தமிழகத்துக்கான 3 விருதுகளும் வரும் நவம்பர் 7-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் பராமரித்தல் மற்றும் நீர்சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச அமைப்பால் இத்தகு விருது வழங்கப்படுவது மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதேபோல, 2022-ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழகம் சார்பில் மேலும் 10-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான முன்மொழிவு அனுப்பப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in