

தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 553 கல்லூரிகள் தனியார் சுயநிதி கல்லூரிகள். சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி செயல்பட்டு வருகிறது.
கடைசியாக 2012-ம் ஆண்டு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக ரூ.70 ஆயிரமும், அரசு ஒதுக்கீட்டில் சேருவோருக்கு ரூ.40 ஆயிரமும் (என்.ஏ.சி. அங்கீகாரம் பெற்ற படிப்பாக இருந்தால் ரூ.45 ஆயிரம்) செலுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு கல்விக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாற்றப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில் மாற்றம் ஏதும் இருக்குமா என்பதை அறிந்துகொள்ள மாணவர்களும் பெற்றோரும் ஆர்வமாக உள்ளனர்.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்கக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த ஆண்டு சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை மாற்றம் செய்ய வாய்ப்பில்லை. ஏற்கெனவே, நடைமுறையில் இருந்து வரும் அதே கல்விக் கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.