

திருச்சியில் நடக்கும் மாற்று அரசியல் வெற்றி மாநாட்டுக்கு பிறகு எங்களது கூட்டணியின் பலம் அனைவருக்கும் தெரியும் என வைகோ பேசினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மூலப்பாளையம் பகுதியில் வைகோ பேசியதாவது:
வறுத்தெடுக்கும் வெயிலில் பிரச்சார கூட்டம் நடத்தி, பொதுமக்களை ஐந்து மணி நேரம் காத்திருக்க வைத்து 6 பேர் இறக்க காரணமானவர் ஜெயலலிதா. தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு நல்ல பந்தல் அமைத்து, பானையில் தண்ணீர் வைத்து பொதுக்கூட்டங்களை ஜெயலலிதா நடத்தி இருக்கலாமே.
எங்களது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்களது ஆட்சியில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டு ஊழல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடுவோம். அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். முதல்வர், அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுக்க வேண்டும்.
கார்ப்பரேட் கம்பெனிகளின் பிரதமராக மோடி விளங்குகிறார். சிறு வணிகர்களை அழிக்கும் உலகளாவிய ஒப்பந்தத்தில் பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். இதனால், மிகப்பெரிய பன்னாட்டு வணிக வளாகங்கள் தோன்றி, சிறிய வணிகர்கள் அழிக்கப்படுவர்.
ஓட்டுக்கு பணம் கொடுத்ததை இதுவரை தேர்தல் ஆணையம் தடுத்தது இல்லை. பணத்தை கொண்டு மட்டும் யாரும் வெற்றி பெற்று விட முடியாது. இரு கட்சிகளின் லஞ்ச பணத்தை வாங்கக் கூடாது என சிறுவர்கள், மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு அறிவுறுத்துவர்.
தேமுதிக - மக்கள் நலக்கூட் டணி - தமாகாவின் பிரச்சாரத்தில் கடந்த ஒரு வாரமாக சோர்வு ஏற்பட்டுள்ளது என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. திருச்சியில் வரும் 11-ம் தேதி நடக்கும் மாற்று அரசியல் வெற்றி மாநாட்டுக்கு பிறகு நமது பலம் அவர்களுக்குத் தெரியும். தடைகளைக் கடந்தால்தான் நாம் ஜெயிக்க முடியும். இந்த தேர்தலில் ஆட்சி எனும் பசுஞ்சோலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.