Published : 23 Apr 2022 07:13 PM
Last Updated : 23 Apr 2022 07:13 PM

வைகை ஆற்றில் மணல் எடுத்து தடுப்பணை கட்டும் ஒப்பந்ததாரர்கள்: வேடிக்கைப் பார்க்கும் அதிகாரிகள்

படம்: ஆண்டனி செல்வராஜ்

மதுரை; மதுரை ஆரப்பாளையத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்காக ஆற்றிலே மண் எடுத்து தடுப்பணை கட்டப்படுவதாகவும், அதனைத் தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை வைகை ஆற்றல் ஓடக்கூடிய தண்ணீரை ஆங்காங்கே தடுத்து தேக்கி வைத்து மாநகராட்சிப் பகுதிகளின் நிலத்தடி நீரை பெருக்க தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. ஏற்கெனவே மாநகராட்சியின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஏவி மேம்பாலம் அருகேயும், ஒபுளாபடித்துறை அருகேயும் தடுப்பனைகள் கட்டப்பட்டது. ஆனால், எந்த நோக்கத்திற்காக இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டதோ அது நிறைவேறாமல் தடுப்பனைகள் கழிவு நீர் தேக்கமாக மாறியது.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போதுதான் இந்த தடுப்பணைகளில் நல்ல தண்ணீர் தேங்குகிறது. தற்போது அடுத்தக்கட்டமாக ஆரப்பாளையம் படித்துறை அருகே வைகை ஆற்றின் குறுக்கே புதிதாக பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணை கட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள வைகை ஆற்றுப் பகுதி சமன்படுத்தப்பட்டது. தற்போது தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நடக்கும் நிலையில், அருகில் உள்ள வைகை ஆற்று மணல் மற்றும் மண் ஆகியவற்றை எடுத்து கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியது: "தடுப்பணை கட்டுவதற்கு அருகில் உள்ள ஆற்றுப் பகுதியை வெட்டி எடுத்து பூச்சு வேலைக்கு பயன்படுத்தக்கூடிய மணலை அள்ளுகிறார்கள். மண்ணையும் அள்ளி தடுப்பணை பகுதியில் கொட்டி சமன்படுத்துகின்றனர். அதற்கு மாற்றாக வெளி இடத்தில் இருந்து கொண்டு வரக்கூடிய வளமில்லா மண்ணைக் கொண்டு வந்து வெட்டி எடுத்த பகுதியில் கொட்டி நிரப்புகின்றனர். எந்த பொதுப் பணித்துறை அதிகாரிகளும் வந்து இப்பணியை நேரடியாக வந்து கண்காணிப்பதில்லை.

தடுப்பணை கட்டுமானப் பணியை ஒப்பந்தம் எடுத்தவர்கள், மண் மற்றும் மணல் ஆகியவற்றுக்கும் சேர்த்துதான் பணம் பெற்று இருப்பார்கள். அவர்கள் எந்த வைகையிலும் ஆற்றுப் பகுதியை தோண்டிவதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை. சாதாரணமாக வைகை ஆறு கரை ஓரங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளையே ஆக்கிரமிப்பு என்று கூறி மனசாட்சியே இல்லாமல் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். அப்படியிருக்கையில் தற்போது அவர்கள் ஆற்று மணல் சுரண்டப்படுவதை மட்டும் வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

ஆற்றுப்பகுதியை சமன்படுத்துவதாக கூறி மணல் மற்றும் மண்ணை பகிரங்மாக வெட்டி லாரிகளில் எடுத்துச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே வைகை ஆற்று மண் வளத்தை எடுத்தால் எதிர்காலத்தில் ஆற்றின் சீரான நீரோட்டம் பாதிக்கப்படும். ஆறு அதன் உயிரோட்டத்தை இழந்து தென்பெண்ணை ஆறு போல் நிரந்தர வறட்சிக்கு இலக்காகிவிடும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x