Last Updated : 23 Apr, 2022 06:18 PM

Published : 23 Apr 2022 06:18 PM
Last Updated : 23 Apr 2022 06:18 PM

"மக்கள் மாறினால் 'சிஸ்டம்' தானாக உடைந்துவிடும்" - அமுதா ஐஏஎஸ் சிறப்பு நேர்காணல்

தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் பெ.அமுதா, ஐ.ஏ.எஸ்.

அதிகாரிகள் குறித்த புகார்களை மக்களிடம் இருந்து எளிய வழியில் பெற்று, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறை தயாராகி வருகிறது என்று அப்டேட் தருகிறார்; பெண் பஞ்சாயத்து தலைவர்களின் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் கணவர்கள், உறவினர்களின் தலையீடு இருந்தால், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறார் அமுதா ஐஏஎஸ்.

நாளை - ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். இதையொட்டிய நிகழ்வுகளுக்காக சுழன்றுவரும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் பெ.அமுதா, ஐ.ஏ.எஸ். உடனான சிறப்பு நேர்காணல்...

ஊரக வளர்ச்சித் துறையில் தற்போது முன்னெடுத்துள்ள பணிகள் என்னென்ன?

"ஊரகப் பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் ஊரகச் சாலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், குக்கிராமங்களை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காகச் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வடிகால் வசதி மற்றும் ஜல் ஜீவன் திட்டம் மூலம் 37 மாவட்டங்களின் குக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்க இருக்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால் ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள், மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம், விளம்பர வரி போன்ற ஊராட்சியின் அனைத்துச் சேவைகளும் இணையதளம் மூலம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பஞ்சாயத்தில் இதுவரை ஆன்லைன் வசதிகள் கிடையாது. அதனை இப்போது ஏற்பாடு செய்திருக்கிறோம். மேலும், பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இணைவதன் மூலமாக, உறுப்பினர்களுக்கான அரசு சலுகைகள் பெறுவதற்கும், அவர்கள் வங்கிகளில் அதிகளவில் கடன் பெறுவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது."

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் வளர்ச்சி எத்தகையது?

"நம்முடைய மாநிலம் வளர்ச்சியடைந்த மாநிலம்தான். பொதுவாக தமிழகத்தில் 10, 15 வருடங்களுக்கு முன்பே செய்த வளர்ச்சித் திட்டங்களை, இப்போதுதான் சில மாநிலங்களில் செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் நம்முடைய மாநிலம் ஒருபடி முன்நிற்கும் வளர்ச்சியடைந்த மாநிலமாகத்தான் இருக்கிறது."

உள்ளாட்சியில் நிறைய பயிற்சிகள் கொடுத்து தயார்படுத்தினாலும், அதிகாரிகள் - அலுவலர்கள் மீதான புகார்கள் குறைந்தபாடில்லை. இதற்கான தீர்வு?

"ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்கள் தொடர்பான குறைகளைத் தொலைபேசி, கைப்பேசி செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு பதிலளித்து குறைகளை நிவர்த்தி செய்து வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய மாநில அளவிலான மக்கள் குறைதீர் மையம் அமைக்கப்படும். முன்பு மக்கள் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றால், ஒரு கேம்ப் நடக்கவேண்டும். இல்லையென்றால், நாங்கள் நேரடியாகச் சந்திக்கும் நேரங்களில் புகார்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால், இன்று அப்படியல்ல. ஏராளமான வழிகள் உள்ளன. இப்பொழுது நாங்கள் வாட்ஸ்அப் நம்பர், கால்சென்டர் நம்பர் மற்றும் மொபைல் ஆப் ஒன்றை கொடுக்க இருக்கிறோம். இதில், எந்தக் குற்றம் எங்கு நடந்தாலும், மக்கள் புகார் செய்தால், நாங்கள் அந்தக் குற்றச்சாட்டிற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து விடுவோம். அதற்கான ஏற்பாடுகள் இப்பொழுது நடந்து வருகிறது. விரைவில் நடைமுறைக்கு வரும். அப்பொழுது அதிகாரிகள் குறித்த புகார்களையும் ஆன்லைன் மூலமாக தெரிவிக்கலாம்."

மக்கள் மற்றும் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு என்ன அறிவுரைகளை சொல்கிறீர்கள்?

"அந்தக் காலத்தில் மக்களுக்காக உழைத்த தலைவர்கள் இருந்தார்கள். இப்போது அப்படிப் பார்ப்பது சற்று குறைவுதான். பொதுவாக மக்கள் எல்லோரும் ‘இலவசங்கள்’ என்று வரும்போது, அவற்றை பெறத் தகுதியுடையவர்களுக்கு சமமாக தகுதி இல்லாதர்களும் விண்ணப்பம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. எனவே, மக்களாகிய நீங்களும் உங்கள் தவற்றை திருத்திக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே மோசமான ஒரு கட்டமைப்பை உடைக்க மக்களாகிய உங்களால் மட்டுமேதான் முடியும். அதேபோல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களுக்கான நலனில் எப்போதும் கவனத்துடன் இருந்து பணியாற்றுவது அவசியம்."

கிராம சபைக் கூட்டம் நடக்க முக்கிய காரணமே நீடித்த நிலையான வளர்ச்சி (Sustainable Development Goals) இலக்குகளை அடைய வேண்டும் என்பதற்காகத்தான். அது இன்றும் கிராம அளவில் சமானிய மக்களிடம் ஏதோ கூட்டம் நடத்துகிறார்கள் என்ற அளவிலேயே இருக்கிறது. அந்தவகையில் கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை வெளிப்படையாகத் தெரியபடுத்தலாமே?

"இந்த நிதியாண்டில் எல்லா பஞ்சாயத்துகளிலும் 2021-2022-க்கான பஞ்சாயத்து செலவு கணக்கு நோட்டீஸ் கட்டாயம் ஒட்டப்படும். வருகின்ற மே மாதம் 1ந்தேதி நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் படித்தும் காண்பிக்கப்படும். மக்களும் இதில் சிரத்தையெடுத்து கலந்துகொள்ள வேண்டும்."

பெண் ஊராட்சித் தலைவர்கள் பலரின் பின்னால் நிர்வாக ரீதியாக அவர்களின் கணவர், குடும்பத்தினரின் தலையீடு அதிகம் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் குறித்து...

"ஊராட்சி நிர்வாகத்தில் மகளிரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் மேலாக, இந்த முறை 56 சதவீத பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். ஆனால், இன்று குடும்பங்களிலேயே சமத்துவம் இல்லை. பல குடும்பங்களில் தங்கள் வீட்டின் வரவு செலவு கணக்கு கூட பெண்களுக்கு தெரியவில்லை. அப்படி இருக்கையில் பெண் பஞ்சாயத்து தலைவர்களின் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் கணவர்களின் தலையீடு இருக்க வழி இருக்கிறது. அதற்கு அவர்கள் இடம் கொடுக்கக் கூடாது.

அதுபோக, பெண் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். அதில் பஞ்சாயத்து தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். மேலும், பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலைவராக இருப்பவருடைய கணவரின் தலையீடு இருப்பதாகப் புகார்கள் வந்தால், நிச்சயம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதைச் செய்யணும் செய்யக்கூடாது என்பதுதான் விதி. அதை மீறினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்."

பஞ்சாயத்து ராஜ் பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது...

"இது மக்கள் ஆட்சி. மக்கள் ஆட்சியில் பங்கு எடுக்க வேண்டும். நாம் எப்போது நம் கடமையைச் செய்கிறோமோ அப்போதுதான் உரிமையைப் பெற முடியும். சாலையில் வழிந்தோடிக் கொண்டிருக்கும் குடிநீர் குழாயை அடைப்பது முதல் பள்ளிக்கூட கட்டிடங்களைப் பாதுகாப்பது வரை அனைத்தும் நம் கடமை. அரசு சொத்துகள் அனைத்தும் நம் சொத்தாகக் கருதி பாதுகாக்க வேண்டும். இதனை மக்கள் தங்களின் அடிப்படைப் பழக்கங்களில் ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் அப்படியே இருக்கும் வரையில் சிஸ்டமும் அப்படியேத்தான் இருக்கும். மக்கள் மாறினால் சிஸ்டம் தானாக உடைந்துவிடும்."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x