முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நெல்லை பெண் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

Published on

சென்னை: மர்ம நபர் கத்தியால் குத்தியதால் படுகாயம் அடைந்த நெல்லை பெண் உதவி ஆய்வாளருக்கு உயர்தர சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸி என்பவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். உதவி ஆய்வாளர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவரை தொடர்பு கொண்டு முதல்வர் நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் , முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in