Published : 23 Apr 2022 10:58 AM
Last Updated : 23 Apr 2022 10:58 AM

சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 55 ஆக அதிகரிப்பு: இதுவரை XE  திரிபு இல்லை எனத் தகவல்

சென்னை: சென்னை ஐஐடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அனைவருக்கும் சோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி தற்போது வரை 55 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "சென்னை ஐஐடியில் இதுவரை 1,470 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 55 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 30 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அதிகரித்தாலும் பரிசோதனைக்கு ஏற்ப நோய்ப் பரவல் விகிதம் (TPR- டோட்டல் பாசிடிவிட்டி ரேட் ) குறைவாகத்தான் உள்ளது.

தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 55 பேருக்கும் குறைவான அளவு பாதிப்புதான் உள்ளது. நோய் பாதித்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் லேசான தொண்டை எரிச்சல் உள்ளது. தமிழகத்தில் இதுவரை XE திரிபு கண்டறியப்படவில்லை" என்றார்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 30, பெண்கள் 27 என மொத்தம் 57 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 37 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,447 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 286 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் என்ற உத்தரவு மீண்டும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை இதுவரை செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமே கரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,527 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 33 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஜூன் மாதத்தில் இந்தியாவில் இன்னொரு கரோனா அலை உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x