Published : 23 Apr 2022 06:55 AM
Last Updated : 23 Apr 2022 06:55 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் ஒவ்வொரு 4 முதல் 5 வார்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி உள்ளது. இத்தொட்டிகளைப் பராமரிக்கும் பொறுப்பை பிஆர்சி என்ற நிறுவனம் செய்துவருகிறது. அந்தநிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள்தான் தற்போது மாநகராட்சி கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளைப் பராமரிக்கின்றனர்.
மதுரை பைபாஸ் ரோடு நேரு நகரில் உள்ள கழிவு நீர் சேகரிப்பு கிணற்றில் மின்மோட்டார்கள் பழுதடைந்திருந்தன. பிஆர்சி நிறுவன ஒப்பந்தப் பணியாளர்கள், நேற்றுமுன்தினம் இரவு பழுது நீக்கும்பணியில் ஈடுபட முயன்றனர். முதலில் மாடக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார்(45) தொட்டியில் இறங்கினார். நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த மற்றஇரு பணியாளர்களான மாடக்குளம் சரவணன்(32), அலங்கா நல்லூர் லட்சுமணன் (31) ஆகியோரும் தொட்டியில் இறங்கினர்.
அப்போது விஷ வாயு தாக்கி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவலறிந்த எஸ்எஸ்.காலனிபோலீஸார், பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள பிஆர்சி நிறுவனம் அதன் ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கூறி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர்கள் மதுரை பேங்க் காலனி ரமேஷ் (29), சென்னையைச் சேர்ந்த லோகநாதன்(50) ஆகியோரை கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறியதாவது: நேருநகரில் உள்ள கழிவுநீர் சேகரிப்புதொட்டியை பழுதுநீக்கச் சென்றபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்துஉள்ளது. பராமரிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 21 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால்,முறையான பாதுகாப்பு உபகரணங்களை அணியாமலே ஊழியர்கள் சென்றனர். இயல்பாக இந்தப்பணியை ஊழியர்கள் தினமும் செய்வதால் அவர்கள் ஆபத்தை உணராமல் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுகின்றனர். அதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்றனர்.
விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து ஒப்பந்தப் பணியாளர்களின் குடும்பத்தினர் மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால், காவல் துறைமற்றும் மாநகராட்சி அதிகாரிகள்உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இறந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம், வீட்டுக்கு ஒருவருக்கு அரசுப் பணி என்ற கோரிக்கையை முன்வைத்தனர். தொடர்ந்துபேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மாநகராட்சிப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்திருந்தாலும் அதன் பணிகளைக் கண்காணிப்பது மாநகராட்சியின் கடமையாகும். ஆனால், கண்காணிப்பு இல்லாததே இதுபோன்ற விபத்துகள் நிகழக் காரணம் என ஓய்வுபெற்ற மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT