Published : 23 Apr 2022 06:18 AM
Last Updated : 23 Apr 2022 06:18 AM
திருப்பூர்: சிறுவர்களை எளிதில் ஈர்க்கும் சிரிஞ்ச் சாக்லெட்டுகள் திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் அரிசி கடைவீதி, பழைய மார்க்கெட் வீதி, தாராபுரம் சாலை, கேஎஸ்சி பள்ளி வீதி, பல்லடம் சாலை மற்றும் பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைஉணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் சிகரெட், வீணை, சைக்கிள், மிளகாய் போன்ற வடிவங்களில் தயாரிக்கப்பட்ட சாக்லெட்களும், அதிக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட சாக்லெட்களும் விற்பனை செய்வது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வியாபாரிகளிடம் விசாரித்ததில், அரண்மனைப்புதூர் பகுதியில் வசிக்கும் சாகுல் என்ற மொத்த விற்பனையாளரிடம் இருந்து இவ்வகை சாக்லெட்களை வியாபாரிகள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கு 34 பாட்டில்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிரிஞ்ச் வடிவிலான சாக்லெட்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட அழகிய வடிவிலான சாக்லெட்களை சிறுவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். கைப்பற்றப்பட்ட சாக்லெட்கள், மதுரையில் இருந்து மொத்தமாக திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது, தெரியவந்துள்ளது. சிரிஞ்ச் சாக்லெட்களில் உள்ள சிரிஞ்ச் வடிவிலான பொருள் பிளாஸ்டிக் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவற்றின் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வெளியான பின்பே, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT