

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மிட்டஹள்ளி கிராமத்தில் 3 யானைகள் முகாமிட்டு பயிர்களை சேதம் செய்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறி ராயக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டிருந்த 3 யானைகள், நேற்று முன்தினம் நள்ளிரவு பாலக்கோடு வழியாக காவேரிப்பட்டணம் அருகே மிட்டஹள்ளி கிராமத்திற்கு வந்தன. அங்கு தாலமடுவு என்னும் இடத்திற்குச் சென்ற யானைகள், அங்கிருந்த நெல், வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின. இதனைக் கண்டு அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி வனத்துறையினர், யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோடை வெயில் காரணமாக யானைகள் ஆக்ரோஷத்துடன் உள்ளதால், அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர். பயிர்களை தின்ற யானைகள், அங்கிருந்த குட்டையில் தண்ணீர் குடித்தன. இரவு நேரத்தில் பட்டாசுகள் வெடித்து, மீண்டும் பாலக்கோடு வழியாக ராயக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.